சனி, 9 பிப்ரவரி, 2013

மேலப்பாளையத்தின் நிகழ்வுகள்


இணையத்தால் இதயத்தை இணைப்போம்
           மேலப்பாளையம் நகரம் இஸ்லாமியர்கள் நிறைந்த மாநகரம். இஸ்லாமியர்கள் சுமார் ஒன்னரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். பலதரப்பட்ட மக்களுடன் உறவு முறை சொல்லி பழகுவார்கள்.பாமர படிப்பறிவு இல்லாத மென்மையான மக்கள்.கொஞ்சம் கொஞ்சம் படித்தவர்கள் கூட நாட்டில் நடந்த சுதந்திர போரில் ஆங்கில மொழியை நாம் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வந்ததால் படிப்பை பாதியில் விட்டு நாட்டுபற்றை காண்பித்த தியாக சீலர்கள். யாரையும் உடனே நம்பி விடுவார்கள்.இரக்க சிந்தனை உடையவர்கள்.யாரவது பசி என கேட்டால் வயிறு நிறைய சாப்பாடு கொடுத்து அனுப்பும் ஈகை குணம் நிறைந்தவர்கள்.வாசலில் வரும் மிஷ்கின்களுக்கு சில்லறை இருந்தால் கொடுப்பார்கள் இல்லை என்றால் மாப்பு செய்ங்கோ என்றோ அல்லது அடுத்த இடம் கேளுங்கோ என்றோ பாணியோடு கூறுவார்கள்.
                               வீடுகளின் மேற்கூரை ஓலைகள் வைத்து கட்டிய ஓலை வீடுகள். தரையில் ஆற்றில் குறுமணலை எடுத்து வந்து தண்ணீர் வைத்து குலைத்து பூசிய தரை பின்பு அந்த நிலை மாறி கொல்லம் ஓடு வந்ததும் வசதி உள்ளவர்கள் மட்டும் மேற்கூரை பணங்கம்பில் ஓடுகள் அடுக்கி ஓட்டு வீடாக மாற்றம் செய்தனர். இன்னும் வசதியானவர்கள் மட்டு வீடு கட்டினார்கள். மட்டு வீடு ஊரில் சொற்பமாகவே இருந்தது.வீட்டுக்கு பாத்திபோட சுண்ணாம்புடன் கருப்பட்டி பால் எடுத்து கலவை செய்த பாத்திகள் மற்றும் சுவர்கள் கட்டியதால் தற்போது அதை  கஷ்டப்பட்டு தான் உடைக்கிறார்கள். அந்த அளவிற்கு உறுதியான கட்டுமானங்கள் இருந்தது. வசதியான வீடுகளில் பர்மாவில் இருந்து தேக்குமரங்கள் கொண்டு வந்து கதவு, ஜன்னல்கள்,உத்திரம் போன்றவைகள் செய்தனர் இன்று அந்த வீடுகளை இடித்து புதிய வீடு கட்டும்போது மரங்கள் நல்ல விலைக்கும் போகிறது.
            தற்போது ஓடுவீடுகள் கான்கிரீட் வீடுகளாக பலமாடிகள் வைத்து நவீன முறையில் கட்டிவருகிறார்கள். தெருவுக்கு குறைந்தது இரண்டு வீடுகளாவது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது இதில் கொடுமை வீடு கட்டி முடிந்ததும் மணல் செங்கல் போன்றவைகளை அப்புறப்படுத்த மட்டும் எண்ணம் பலருக்கு வருவதில்லை. அது போக்குவரத்துக்கு இடையூராகவே இருப்பதும் தெரிவதில்லை மேலும் முடிந்த வரை தெருவை ஆக்கிரமித்து கட்டி தெருவை சுருக்குவது போன்றவைகள் வேதனைக்குறியது. முன்பெல்லாம் தெருக்களில் மணல் லாரிகள் சிரமமில்லாமல் சென்று வந்த காலங்கள் மாறி தெருவின் அகலம் ஆக்கிரமிப்பாளர்களால் குறைக்கப்பட்டு ஆட்டோ செல்வது கூட கடினமாக உள்ளது.பல தெருக்களில் ஒரு செரவு மட்டுமே பயன்படுகிறது. தெருக்களில் போர் போட்டு அதை பாதுக்காக செங்கல் வைத்து கட்டி ஆக்கிரமிப்பு கொடிகட்டி பறக்கிறது.
                                                                                   தொழில்
            முன்பெல்லாம் ஊரில் நெசவுத்தொழில் வீட்டுக்கு வீடு செய்து வந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் காக்குழிகள் இருக்கும். அதிலே சாரம்,நேஞ்சி (துண்டை அப்படிதான் அழைப்பார்கள்). அது நலிவடைந்த பின்பு ஊரில் பீடித்தொழில் வந்தது.தாய்மார்கள் காலை ஆறுமணி அல்லது ஏழு மணிக்கு பீடி தட்டை மடியில் வைத்து குறுக்கு வலியோடு சுற்ற ஆரம்பித்தால் மதியம் சாப்பிட்டு விட்டு பீடிக்கம்பெனிக்கு போகும் வரை தொடர்ந்து சுற்றுவார்கள். கையினால் புகையிலையை வைத்து சுற்றி சுற்றி கையெல்லாம் மஞ்சளாக மாறிவிடும் நிகோடின் கைகளில் படிந்து இருக்கும். மக்களுக்கு ஆஸ்துமா, டி.பி.மற்றும் புற்று நோய்களை வாரி வழங்குகிறது.பெருநாள் மற்றும் சில கந்தூரிகளுக்கு மட்டுமே அவர்கள் நிம்மதியாக இருக்கமுடிகிறது. மறைந்த முஸ்லிம்லீக் தலைவர் சிராஜுல் மில்லத்அப்துல்சமதுசாஹிப்அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு பேச வரும்போதெல்லாம் அல்லாஹ் இந்த மக்களை பீடித்தொழில் இருந்து பாதுகாப்பாயாக என்றும் மாற்று தொழிலை ஆண்மக்களுக்கு வழங்குவாயாக என துவா செய்வார்கள்.
             ஆண்கள் பெரும்பாலும் பீடிகம்பெனிகளில் பண்டல் வேலை, பீடி எடுக்கும் வேலை, இலைதூள் நிறுத்து போடும் வேலை செய்வார்கள். சிலர் சென்னை கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களில் வேலை செய்ய சென்று விடுவார்கள்.
               பள்ளிவாசல்களில் பெரியவர்கள் மட்டுமே தொழுது வந்தார்கள்.சில குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் மட்டுமே ஜும்மா பள்ளியாகும். ஜும்மா நாளில் மட்டுமே கூட்டம் பள்ளிவாசல்களை நிரம்ப செய்யும். மற்ற வக்த்களில் ஒன்று அல்லது இரண்டு சப்புகள் தான் நின்று தொழுவார்கள்.


ஊர்கொந்தும் கட்டுப்படும்
                தெருவுக்கு ஒன்று முதல் இரண்டு கொந்துகள் இருக்கும்.மக்கள் கொந்து எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவார்கள். போலீஸ், கோர்ட்டு என்று போகத நண் மக்கள். ஊர் கட்டுக்கோப்போடு இருந்தது.தெருவில் வரும் பிரச்சனைகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள்  எதுவாக இருந்தாலும் பேசித்தீர்த்துக் கொள்வார்கள்.
                 குடும்பத்தில் அண்ணன் தம்பி விவகாரம் என்றால் ஊர் தலைவருக்கு(கொந்து) சம்பந்த பட்டவர்கள் சொல்லுவார்கள். அவர் கேட்கும் போதே பிரச்சனைகுறியவர்களின் பாதிகோபத்தை குறைத்து விடுவார்.பின்பு இரண்டாம் கட்ட தலைவர்கள் உக்கார்ந்து அவர்களை அழைத்து தனித்தனியாக விசாரித்து பிறகு இருதரப்பினரையும் சேர்த்து பேசி சுமுகமான தீர்வுக்கு வருவார்கள்.
                  தீராத பிரச்சனைகளை பொதுவான இடத்தில் வைத்து தெருவே ஒன்று கூடி விசாரித்து முடிவுசெய்வார்கள்.பெண்பிள்ளைகள் விசயத்தில் வழக்கு பேச அல்லாஹ்வின் பயத்தோடு பேசி சுமுகமான தீர்வு காண்பார்கள்.
                   இப்போது அந்த கட்டுப்பாடுகளை ஒற்றுமையை இழந்து நீதிமன்றங்கள்,காவல்துறை அதிகாரிகள் முன்னால் கைகட்டி கொண்டு அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு வரும் சூழ்நிலை தான்
கல்யாண உறவுமுறைகள்
                   ஊருக்குள்ளேயே பெண்கொடுப்பதும் பெண் எடுப்பார்கள். ஒரு சிலர் வெளியூர்களில் சம்பந்தம் செய்வார்கள்.அந்த காலத்திலே சில பெரிய குடும்பத்து கல்யாணங்கள் என்றால் தெரு முழுவதும் பந்தலும்,விருந்தும் என தடபுடலகாக நடக்கும்.சாதரணமாக கல்யாண சாப்பாடு குடும்பத்தோடு தான் சாப்பிடுவார்கள் தனி நபர் கலந்து கொள்வது இல்லை.ஏழு நாட்கள் விருந்து உபசரிப்பும் இருக்கும். கல்யாணங்கள் இரவு தான் நடக்கும் அதிகாலை ஐந்து மணிவரை நடந்த கல்யாணங்களும் உண்டு.
எழுச்சி
              பீடித்தொழில் செய்து கஷ்டப்பட்டு நோய்களோடு படும் துன்பம் நமது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்ற முடிவில் தனது பிள்ளைகளை படிக்க வைக்க முன் வந்தார்கள். ஆரம்ப பாடசாலைகள், நடுநிலைப்பள்ளிகள், முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி, ரகுமானிய மேல் நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்து நல்ல மாணவமணிகளை உருவாக்கினார்கள்.வறுமையிலும் படிக்க வைத்து பெரும்பாலான மக்கள் அரசு உத்தியோகத்தில் சேர்ந்தார்கள்.
               ஒரு தலைமுறையில் சில மாற்றங்கள் வந்தது.படிக்க வசதி இல்லாத மாணவச்செல்வங்களை சில தனவந்தர்கள் பைத்துல்மால் மூலமாக படிக்க நிதிஉதவிசெய்வதால் நன்கு படித்து இன்று உலகநாடுகள் முழுவதும் பல துறைகளில் கால்பதித்து சாதித்து வருகிறார்கள்.
             நமதூரின் வெளிநாட்டு வருமானம் வருவதற்கு இ.டி.எ கம்பெனி தான் முக்கியமான காரணம்.படித்து முடித்த மாணவர்களை கொண்டு சென்று வேலையும் சொல்லி கொடுத்து கூலியும் கொடுத்து அந்த நிறுவனம் தான்.இன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் இன்று பல கம்பெனிகளில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.

               1992 ம் ஆண்டு பாபரிமஸ்ஜித் இடித்த செய்தி காட்டு தீ போல பரவி ஊரிலும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் துரதிஷ்டவசமாக நடந்துவிட்டது. அதன் பிறகு ஊரிலே பல மாற்றங்கள்
               மது இல்லையேல் இரவில் தூக்கம் இல்லை என திரிந்தவர்கள். தியேட்டரில் புதுபடம் போட்ட அன்று அதிகாலை சென்று படம் பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பும் பலர். ஊரிலே வீண் சண்டைபோட்டு கொண்டு திரியும் சிலர்  என தன் நிலைகளை மாற்றியவர்கள் பலர் அவர்கள் முகத்தில் தாடி வைத்து கொண்டு முகப்பொலியுடன் இமாம் ஜமாஅத்தோடு தொழுவதை காண முடிகிறது. பள்ளிவாசல்களில் ஐந்துவேளை தொழுகையிலும் கூட்டம்தான். மகரிப் இஷா வக்த்களில் பள்ளிவாசல்களில் இடம்கிடைப்பது கஷ்டம்.
எங்கே சென்றது
              ஊரில் ஒரே பெருநாள் என்ற நிலை மாறி . பல பெருநாள்களாக உருவெடுத்து உனக்கு பெருநாள் எப்போது இன்றா? நாளையா? அல்லது நாளை மறுநாளா? என்று கேட்கும் அளவிற்கு பல பெருநாளை கொண்டாடும் விதமாக ஒற்றுமை கொடிகட்டி பறக்கிறது.
                மார்க்க விசயங்களில் பல சீர்திருத்த கருத்துகளை கொண்டு வந்து மக்கள் மத்தியில் புதிய மாற்றத்தை தந்த ஜமாஅத்தும் இன்று பல ஜமாஅத்துக்களாக பல தலைவர்களாக பிரிந்து கூட்டம் அதில் பாதி இதில் பாதி என பல பிளவுகள். சில ஜமாஅத்களும் சில அமைப்புகளும் ஊரில் விஞ்ஞான பிறை பிரச்னையை கொண்டு வந்தது. ஒரு நோன்புபெருநாள் மட்டுமே ஒன்றாக தொழுதனர்.ஹஜ் பெருநாள் பிறையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்து தனியாக தொழுதனர்.அங்கும் ஒற்றுமை குலைந்தது.
                   இன்று கேரளாவில் அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் ஒருமித்த கருத்தோடு ஒரு தலைமையில் இருந்து பல சாதனைகள் புரிந்து உள்ளர்கள. உதாரணமாக கேரளாவில் முஸ்லிம்களுக்கு பனிரெண்டு சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலீம்களுக்கு கல்லூரி பேராசிரியர்கள் போல அரசாங்க சம்பளம் என முஸ்லிம்களுக்கு சலுகைகளும்,உரிமைகளும் கிடைகிறது நம்மால் ஏன் முடிவதில்லை நமக்குள்ளே பல அமைப்புகள் ஒரு அமைப்பினர் மற்ற அமைப்பினருக்கு ஸலாம் சொல்ல கூட மனம் வருவதில்லை. சமுதாய பொது பிரச்சனைகளுக்கு கூட தனிதனியேபோராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் என நமது ஒற்றுமையை அரசாங்கத்திற்கு காட்டுகிறோம். அரசும் நாம் இப்படி இருப்பதை தான் விரும்புகிறது. எண்ணூறு ஆண்டுகாலம் ஆண்ட சமுதாயம் இன்று அடிமைபட்டு பல மாநிலங்களில் அகதிகளாக விரட்டப்படும் நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.
          வல்ல ரஹுமான் நம் அனைவரையும் ஒற்றுமையோடு இருக்க கிருபை செய்ய துவா செய்வோம்.
                
Mohideen Abdul Jabbar
             


1 கருத்து:

  1. arumaiyaana katturai,,,ovvoru kaalathilum nadandha varalaatrai idhil padhivu seidhulleerhal,, aanaal,, innum virivaaha padhivu seiyungal,,,melapalayathin varalaatrai muzhumaiyaaha padhivu seiyunga,, mikka nandri,, jazaqallahu khair

    பதிலளிநீக்கு