செவ்வாய், 11 செப்டம்பர், 2012


நம்மைவிட்டுமறைந்து போன விளையாட்டுக்கள்
                  மேலப்பாளையத்தில் இருபது வருடங்களுக்கு முன்பாக தெருவில் கூட்டம் கூட்டமாக கூடி அற்புதமாக ஆனந்தமாக சிறுவர்கள் விளையாடுவார்கள்.பலவகையான விளையாட்டுகள் இருந்தது ஒவ்வொரு விளையாட்டும் சில காலங்கள் என பிரித்து விளையாடுவார்கள். எல்லா தெருக்களிலும் ஒரே மாதிரியான விளையாட்டுக்கள் தான் இருக்கும்.வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாட்டை மறந்து விளையாட்டுக்கள் நடக்கும்.விளையாட்டால் சிறுபிள்ளைகள் சண்டை பெரியவர்களுக்கு இடையே அப்பஅப்ப வந்து போகும்.
விளையாட்டுக்கள்
கோலிக்காய்:
                கோலிக்காவை வைத்து அதிகமான விளையாட்டுகள் உள்ளன. இரண்டு கோடுகள் போட்டு இரண்டு முதல் பத்துபேர்கள் விளையாடும் விளையாட்டு அச்சாபரக்கா, சுவரை ஒட்டி பானா வடிவில் கோடுபோட்டு லாக், தெருவில் சிறிய நான்குஇஞ்ச் அளவில் குழி தோண்டி சான் சம்பர் குத்து மற்றும் பொக்கு.டோனிராஜா என விளையாடுவார்கள்
பம்பரமும் அம்பிபிடிப்பதும்:
                பெரிய வட்டகோடு போட்டு மாம்பழகொட்டையினை நடுவில் வைத்து ஆரம்பிக்கும் விளையாட்டு பம்பரம். கொட்டையை பம்பரத்தால் குத்தில் கோட்டை விட்டு வெளியே எடுக்க வேண்டும் ஒருவர் குத்தி வெளியேற்றினால் மற்றவர்கள் அம்பிபிடிக்க வேண்டும் கடைசியாக யார் அம்பி பிடிக்கிறார்களோ அவனின் பம்பரத்தை நடுவில் வைத்து விளையாட்டு ஆரம்பம் ஆகும். நாம் குத்து வது கீழே வைக்கபட்டு இருக்கும் பம்பரத்தில் படவேண்டும் இல்லை என்றால் யார்பம்பரம் படவில்லையோ அவனின் பம்பரத்தை வைக்க வேண்டும் இப்படி மாறி மாறி வைத்து போட்டி போட்டு அந்த பம்பரத்தை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கடத்தி சென்று கடைசியில் யார் பம்பரம் எல்லைக்கு வருகிறதோ அந்த பம்பரத்தை எல்லாரும் சேர்ந்து நங்கு வைப்பார்கள் நங்கு வைப்பதற்கு என்றே கூர்மையான ஆணி போட்டு வைப்பார்கள் பம்பரத்தில் ஐந்துநங்கு முதல் ஐம்பது நங்கு வரை வைத்து பாமபரத்தை உடைக்கும் வரை நங்கு குத்துவார்கள்.சில பேர்களின் தலை மற்றும் கால்களையும்,வீட்டு திருணையில் பீடிசுற்றும் பெண்கள் மீது பம்பரங்கள் தெறித்து ஓடும் அளவிற்கு தனது சக்தியை ஓன்று திரட்டி குத்துவார்கள். இந்த வகை விளையாட்டை இரண்டு முதல் பத்துபேர்கள் வரை விளையாடுவார்கள்

தெளுக்காய்
               தெளுக்காய் என்ற சிறிய கொட்டையை ஒன்று ஒன்றாக நிற்க வைத்து சிறுவர்களின் தகுதிக்கு ஏற்ப தூரத்தில் நின்று குறிபார்த்து அடிப்பது.
               கபடி விளையாட்டு ஒரு தெருவோடு ஒரு தெரு மோதும் அதை காண கூட்டம் அலைமோதும் குறிப்பாக மாலையில் ஆரம்பித்து இரவு வரை நடக்கும் டியூப்லைட் கட்டி பிரமாண்டமாக நடக்கும்


குச்சிக்கம்பு(அந்தகால கிரிக்கெட்)
                 தாய்மார்கள் அதிகம் பயப்படும் வீரவிளையாட்டு பலபேர்களின் கண்களை பதம்பார்த்த விளையாட்டு. தெருக்களில் விளையாடும் போது பல பீடிதட்டுகளை மடியில் இருந்து கவிழ்த்து புகையிலை மற்றும் பீடிஇலைகளை மண்ணில் கொட்டி சண்டைகள் வருவதும் உண்டு.இந்த விளையாட்டும் இரண்டு முதல் பத்துபேர்கள் வரை இரண்டு டீம் பிரித்து விளையாடலாம் ஸ்கோர் உண்டு தரையில் கோடுகீச்சி ஒருசான் அளவுஉள்ள குச்சியை(கில்லி),ஒருமுழங்கை அளவு உள்ள அடிகம்பு மூலமாக கில்லியை கில்லிவிடுவர் எதிர் டீம்மில் இருக்கும் ஆள்கள் கில்லியை கேட்ச் பிடித்தால் அவுட் இல்லைஎன்றால் கீழே விழுந்த கில்லியை எடுத்து பால்விசுவது போல எறிவார் அதை பேட் வைத்து அடிப்பது போல் கம்பு வைத்து அடிப்பார் அந்த இடத்தில் இருந்து சாட் அடித்து எவ்வளவு தூரம் கில்லி போகுதோ அவ்வளவு பாய்ண்டு(ரன்) இரண்டு டீம்களில் யார் அதிகமான பாய்ண்டு எடுக்கிறார்களோ அந்த டீம் வெற்றி பெற்றதாக கருதப்படும்.பாய்ண்டு கணக்கை கோட்டை கணக்கில் சொல்லுவார்கள்.
எறிபந்து
                     சிறிய கல் வைத்து அதன் மேல் துணிகளை சுற்றி பந்துபோல செய்து அதை ஒருவர் மீது ஒருவர் வீசுஎறிவார்கள்.எறியும் போது முதுகில் பட்டால் சிறிதாக வலிக்கும்.
                     கள்ளன்போலீஸ்,ஐஸ்பால்வருகிறேன்,தொட்டுபிடித்து, கல்லா மண்ணா,சிகரெட் அட்டையை வைத்து சீட்டு விளையாட்டு,கபடி,காற்று நேரத்தில் பட்டம், பனைஓலையில் காத்தாடி போன்ற விளையாட்டுகள் விளையாடப்படும்.



பெண்கள் விளையாட்டு
                          அந்த காலத்தில் கல்யாணவீடுகளில் பந்தல் போட்டு பந்தல் உள்ளே ஆற்று மணல் அடிப்பார்கள். அந்த மணலில் மண்ணை கூட்டி குச்சிகுச்சி தாம்பூலம்,பாண்டி,கல்காய்,தாயம்,பாம்புஅட்டை,பல்லாங்குழிபோன்றவிளையாட்டு களை சின்னபிள்ளைகள் முதல் கல்யாணம் ஆனவர்கள் வரை விளையாடுவார்கள்
வீடுகளில் மூஞ்சா
                     நோன்பு இருபத்தியேழு ராத்திரியில் எல்லா சின்னபிள்ளைகளுக்கும் பெருநாளுக்கு எடுத்த புதிய துணிகள் போட்டு சொந்தபந்தங்கள், வட்டாரத்தில் உள்ள வீடுகளில் கொண்டு காட்டுவார்கள் அப்படி போகும்போது பெருநாள் காசுகள் கிடைக்கும் எல்லா சிறுவர்களுக்கு வீடுகளில் உள்ள பணங்கம்புகளிலும், தெருக்களில் உள்ள மரங்களில் கொச்சை கயிறு வாங்கி அதை வாலி தண்ணீரில் ஊறவைத்து மூஞ்சா கட்டி ஒவ்வொரு ஆட்களாக ஆடுவார்கள். ஆட்டத்தை கணக்கு வைக்க ஒன்று முதல் பத்து வரை ஒரு பாட்டு உண்டு
                       ஒன்று கமலக்க கண்ணு, இரண்டு ராஜா வீட்டு செண்டு, மூன்று முருங்கை பட்டைதோடு, நாலு நாய்க்குட்டிவாலு ஐந்து பஞ்சாபறக்குது, ஆறே ஆணைக்குமேலேபாரு, ஏலே என்பேச்சே கேளு, எட்டு டம டம கொட்டு, ஒன்பதே பாளையங்கோட்டை ராஜாவிற்கு விடியவிடிய கல்யாணம் விடிந்து பார்த்த புளியாணம் மற்றும் ஒரு குடம் தண்ணீ எடுத்து ஒரு பூ பூத்தது.......
                      அதன் பிறகு தான் ஜெஸ்,கேரம்போர்டு,கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் பரவலாக விளையாடபட்டது
                     அந்த காலம் போன்று இனி எங்கே வரப்போகிறது என்று யாரிடம் கேட்டாலும் அந்த நினைவுகளை பசும்மையாக பகிர்ந்து கொள்கிறார்கள்

Mohideen Abdul Jabbar
                 

            

1 கருத்து: