செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

அல் அமீன் (காஜா) கோச்சிங் சென்டர்


அல் அமீன் கோச்சிங் சென்டர்
          மேலப்பாளையம் அத்தியடிகீழத் தெருவில் உள்ள ஹாமீம் நடுநிலைப் பள்ளியில் இயங்கி வந்த பிரபலமான டியூசன் சென்டர் அல் அமீன் கோச்சிங் சென்டர் ஆகும். இதனை தண்டலெப்பை தெருவை சார்ந்த மரியாதைக்குரிய ஆசிரியர் டி.எம்.காஜா அவர்கள். வெள்ளை லுங்கி முழுக்கை சட்டை அணிந்து அப்போது பிரபலமான டி.வி.எஸ். 50 வண்டியில் வருவார்கள். பின்பு பஜாஜ் கப் என்ற ஸ்கூட்டர் புதிதாக வாங்கி ஒட்டும்போது கீழே விழுந்ததால் எடுத்த மூன்று அல்லது நான்கு தினங்களுக்குள் அதை கொடுத்து விட்டு மீண்டும் டி.வி.எஸ். வண்டியே வைத்து தற்போது எக்ஸ்.எல். சூப்பர் வைத்து இருக்கிறார்கள்.
            அல்அமீன் காஜா என்றே அழைக்கபட்ட அவர்களின் மாணவர்களுக்கு பாடம் சொல்லி தரும் நடைமுறை ஸ்டைலை பார்த்து ரசித்து பாளையங்கோட்டையில் உள்ள சில மாணவர்களின் பெற்றோர்கள் நீங்கள் பாளையங்கோட்டைக்கு வாருங்கள் உங்களுக்கு இடம் தருகிறோம். மேலும் மாத பீஸாக ஒரு மாணவனுக்கு ருபாய் ஐம்பது தருகிறோம் எல்ல வசதிகளும் செய்து தருகிறோம் என ஆசை வார்த்தைகள் பல கூறி அழைத்த போது அதை அன்போடு மறுத்து குறைவான பீஸ் என்றாலும் பரவாயில்லை எனது சொந்த ஊரான மேலப்பாளையத்தில் வைத்து தான் டியூஷன் எடுப்பேன் என பிடிவாதமாக மறுத்தார்கள். அந்த அளவிற்கு ஊர் மீதும் மாணவ மாணவியர்கள் மீதும் பற்று பாசம்.
            வகுப்பு நடக்கும் போது இடையூறாக பையன்கள் யாரவது பேசினாலோ அல்லது தேவை இல்லாமல் சிரித்தாலோ அந்த பையன் அனைவரின் முன்னிலையில் தோப்பு கரணம் போட வேண்டும். பெண்பிள்ளைகள் முன்னால் தோப்பு கரணம் போடுவது முதலில் அவமானமாக இருக்கும் பின்பு பழகி விடும் ஏன்னென்றால் எப்படியும் படிக்கும் அனைவரும் தோப்புகரணம் போட்டு விடுவார்கள் மற்றொரு தண்டனை பிரதான வாயிலில் இருந்து கட்டி இருக்கும் சாரத்தை முட்டுக்கு மேல் தூக்கி கட்டி தரையில் முழங்கால் போட்டு  வகுப்பு நடக்கும் இடத்திற்கு வரவேண்டும் சாட்டை பிரம்பினால் அடியும் கிடைக்கும்.  ரஜினி படங்களை முதல் நாள் அன்றே பார்த்து விடும் அளவிற்கு ரசித்து பார்ப்பவர்கள். நாங்களோ கமல் ரசிகர்கள் ஒரு முறை ஞாயிறு அன்று அலங்கார் தியேட்டரில் கமல் ரசிகர் மன்ற சார்பில் ஸ்பெஷல் காட்சி நடைபெற இருந்தது நாங்கள் போக கூடாது என்றே அன்று ஸ்பெஷல் வகுப்பு வைத்து இருந்தார்கள் ஆனாலும் நாங்கள் ஸ்பெஷல் காட்சி சென்றோம் எங்கள் அனைவரின் வீடுகளுக்கும் மாணவர்களை அனுப்பி பெற்றோர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என சொல்லியதால் நாங்கள் வீட்டிலும் மறுநாள் சாரிடமும் சரியாக வாங்கி கட்டி கொண்டோம் அதை நினைத்தாலே இன்றும் சுகமாக இருக்கிறது. ஆறாவது வகுப்பு முதல் பன்னிரெண்டாவது வகுப்பு வரை பாடங்கள் சொல்லி கொடுத்தாலும் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு தான் அதிக முக்கியத்துவம். காரணம் பொதுத்தேர்வு என்பதாலே.
           அல் அமீனுக்கு வந்தால் மக்கும் அல்ஜிப்ரா பாடும் என்ற சொல் ஒன்று உண்டு அது உண்மை நிறைந்த சொல்லே ஆகும். ஆம் மக்கு மாணவ, மாணவியர் களும் அல்ஜிப்ரா சூத்திரத்தை பாட்டாக பாடுவார்கள். இப்ப படித்து முடித்து பணியிலே இருப்பவர்களும் கூட இப்ப கேட்டாலும் பாட்டாக சொல்லும் அளவிற்கு மனதிலே பதிந்து இருக்கும் அந்த அளவிற்கு கணக்கு பாடத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்.
            பத்தாம் வகுப்பில் அல்ஜிப்ரா ரெண்டு வட்டகணக்கு மூணுவட்ட கணக்கு வட்டகோண பரப்பு (வ.கோ.ப) ஜியாமெட்ரி,கிராப் போன்ற வற்றில் எளிதான முறையில் மதிப்பெண்கள் எடுத்து பாஸ் மார்க் முப்பத்தைந்தை முதலில் நிறைவு செய்ய வேண்டும் என்பதே அவரின் தாரக மந்திரம் ஆகும். அதன் பிறகு இரண்டு, ஐந்து மற்றும் ஒன் வேடு மதிப்பெண்களில் கவனம் செலுத்தி சதம் எடுக்க வேண்டும்.
             பத்தாம் வகுப்பு இரண்டு குருப் ஒன்று காலை ஏழு முதல் எட்டு மணிவரை மற்றொரு குருப் மாலை எட்டு முதல் ஒன்பது மணிவரை நடைபெறும். பெரும்பாலும் மாலை வேளையில் அதிகமான மாணவர்கள் வருவார்கள்.
              சூத்திரத்தை பாட்டு வடிவிலே சொல்லி தருவார்கள். மேலப்பா ளையத்தில் சமயினா என்ற தைரா குருப் பாட்டு தான் மெட்டுகளாக வரும். அவர் பாடிய பாட்டு ஒன்று ஒத்தையிலே நிக்கிறியே ஏமா கல்பு மெத்தையிலே இருக்கலாம் வாமா என்ற மெட்டை வட்டகோண பரப்பளவு காண இரண்டு வட்ட மற்றும் மூன்று வட்டகணக்கிற்கு பயன்படுத்துவார்கள்
                 இது எத்தன வட்ட கணக்கு ரெண்டு வட்டகணக்கு ஒத்தையில நிக்கிறத சொல்லு
             ஏஇக்கும் ஸ்கோர் பீஇக்கும் ஸ்கோர் மேலே ரண்டு கீழே ரண்டு பிளஸ் எல்லாம் மைனஸ் மைனஸ் எல்லாம் பிளஸ்
                 செய்லாத்துதான் மம்மாத்து மம்மாத்துதான் செய்லாத்து


                                        பீச்சாங்கை பக்கம் சோத்தாங்கை பக்கம் (LEFT Hand SIDE RIGHT HAND SIDE) 
                
           இப்படியே பாட்டு ராகத்திலே நடக்கும் கிளாஸ் நடக்கும் போது இடையிடையே சிரிக்க கூடிய வகையில் காமடியோடு ஜாலியாக இருக்கும்
                மாலை ஐந்து மணி முதல் தொடர்ந்து வகுப்பு எடுப்பதால் பசியோடு சேர்ந்து சோர்வு வந்து விடுவதால் வி.எஸ்.டி பள்ளிவாசலில் இருக்கும் மதினா கடை வடையும் ஆத்துரான் கடை காபி அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் நானோ அல்லது யாராவது வாங்கி வருவார்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு கிளாஸ் இரவு பத்து மணி வரை தொடர்ந்து நடக்கும்.
                 வகுப்பறையிலே அரசியல் பேச்சுக்கும் பஞ்சமே இருக்காது. அப்போது சார் அவர்கள் கடுமையான தி.மு.க அனுதாபி கலைஞர் அவர்களை பற்றி பேசினால் கடும் கோபம் வரும். அடிக்கடி எங்களுக்குள்ளே அரசியல்  விமர்சனங்கள் விவாதங்கள் வரும் நான் சார்ந்துள்ள கட்சிபற்றி வரும் போது நானும் விவாதம் செய்வேன். 1991 நடந்த பாளையங்கோட்டை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட எல்.கே.எஸ். மீரான் மைதீன் அவர்களுக்காக தொடர்ச்சியாக நானும் சில மாணவர்களும் வீடுவீடாக வோட்டு கேட்க டியூசனை கட் அடித்துவிட்டு சென்று விடுவோம் அதற்கும் பலமாக வாங்கி கட்டி இருக்கிறோம்.
                  ஜாலி வித் ஜோலி இல்லைனா எல்லாமே காலி என்று அடிக்கடி சொல்வார்கள் எதை பற்றி பேசினாலும் அதிலே ராகத்தோடே பேசுவது கிளாஸ் போர் அடிக்காமல் ஜாலியாகவே செல்லும் அதனாலே. கணக்கு புக்கை பார்க்காமலே கரும்பலகையில் அவர் சொல்லி கொடுக்கும் கணக்கு நம்பர் ஏதும் மாறாமல் அப்படியே கொஸ்டின் பேப்பரில் வருவது தனிசிறப்பு அப்படியே கணக்கு புக் தேவைபட்டால் ரா.காஜா என்று பக்கத்து வீட்டு பையன்  படித்தான் அவனிடம் ரா நீ போனா புக்க எடுத்துட்டு வரலான் என்பது போல எப்ப எதை பேசினாலும் காமடி கலந்து சிரிக்க வைத்து மனதில் பதிய வைப்பது அவர்களின் தனி ஸ்டைலே ஆகும்.
                 பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்தவுடன் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களின் பெயர் போட்டு வால்போஸ்டர் ஒட்டுவதற்கு அவரே நேரில் செல்வார்கள். தொடரும்......

Mohideen Abdul Jabbar

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் மாசிலாமணி அவர்கள்



மாசிலாமணி சார் அவர்கள்
           
           மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் அய்யா மாசிலாமணி அவர்கள் பெயரில் மட்டும் அல்ல நல்ல குணத்திலும் மாசில்லா மணியே ஆவார்
               1928 ஆம் ஆண்டு பிறந்தார்கள் 
              சார் அவர்கள் தனது கல்வி பணியை எட்டாயபுரத்தில் இரண்டு ஆண்டுகள் செய்து விட்டே முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் பணியாற்ற 1951 ஆம் ஆண்டு சேருகிறார்கள்.
              அய்யா அவர்கள் எட்டு முழ வேஷ்டியில் அரைக்கை சட்டை அணிந்து குலவணிகர்புரத்திலிருந்து சைக்கிளில் தான் வருவார்கள்.
                சார் அவர்களின் கம்பீர நடை அழகே தனி
               வரலாறு புவியியல் ஆங்கிலம் போன்ற படங்களை அவர்களுக்கே உரிய பாணியிலே கம்பீரமாக நடத்துவார்கள்.
               உலக வரைபடத்தை கரும்பலகையில் வரையும் அழகே தனி தான்.
            வகுப்பறையில் கரும்பலகையில் உலக வரைபடத்தை தத்துருபமாக வரையும் அழகே தனி  சாகபீஸை எடுப்பது தான் தெரியும்  உலக வரைபடம் அடுத்த நொடியில் கரும்பலகையில் அற்புதமாக இருக்கும் அந்த அளவிற்கு வேகமாக வரைவார்கள். பெரும்பாலும் சார் வகுப்பில் முதல் இரண்டு வரிசை மட்டுமே இருக்க வேண்டும் மற்றவர்கள் கீழே சார் அவர்களை சுற்றி அமர்ந்து இருக்க சொல்வார்கள்.
                மதிய உணவு முடிந்து ஆரம்பம் ஆகும் வகுப்பில் சாப்பிட்ட களைப்பில் சிலுசிலு வென காற்றில் சார் அவர்கள் சொல்லும் வரலாற்று சம்பவங்கள் மாணவர்களை சொக்க வைக்கும். மாணவர்கள் ஒரு சிலருக்கு தூக்கம் தன்னை மிஞ்சி வரும்போது மற்றவர்கள் சார்  அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள்.           
                  சார் தூங்கும் மாணவனை பார்த்து அய்யா அவனை ஆசீர்வாதம் செய்ங்கைய்யா என கூறி முடிப்பதற்குள் தலையில் குட்டு விழும் எல்லா மாணவர்களும் ஒருவனை சேர்ந்து மொத்தி விடுவதால் தூக்கம் வந்தாலும் தூங்குவதில்லை. பலர் தூங்குவதை கட்டு படுத்தும் பாடு இன்று நினைத்தாலும் சிரிப்பு வருது. பெரும்பாலும் ஆசீர்வாதம் எல்லா மாணவர்களும் வாங்கி இருப்பார்கள்.
                    சார் அவர்கள் மாணவர்களை பார்த்து அடிக்கடி அல்லாஈகான் போலே என்பார்கள். மாணவர்களுக்கு பணத்தின் முக்கியத்துவதை அடிக்கடி அறிவுரை சொல்லுவார்கள். விட்டமின் பா இருந்தால் தான் மனிதனுக்கு மரியாதை என சொல்லி சம்பாத்தியத்தின் அவசியத்தை உணர்த்திய பிதாமகன்
                     சார் அவர்கள் 1986 ஆம் ஆண்டு தனது கல்வி பணியினை நிறைவு செய்கிறார்கள். சார் அவர்களை காண நாம் சென்ற போது அவர்களும்,துணைவியாரும் அன்போடு வரவேற்றார்கள்.
                    சக ஆசிரிய பெருமக்களின் பெயர்களை சொல்லி தனித்தனியே நலம் விசாரித்தார்கள். சக ஆசிரிய பெருமக்கள் தன்னோடு   பாகுபாடின்றி பழகிய விதத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து மனம் மகிழ்ந்தார்கள்.  மறைந்த ஆசிரிய பெருமகனார் ஹபீப் சார் அவர்கள் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னாள் சார் அவர்களை சந்தித்து உடல் நலம் விசரித்தை சொல்லி கண் கலங்கிய அய்யா அவர்கள் சார் மறைந்த செய்தி கேட்டு அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்ததை அவர்களின் துணைவியார் நினைவு கூர்ந்தார்கள்.
                     சார் அவர்களின் கம்பீரம் சற்று தளர்ந்தே காணபட்டது நமக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. நாம் விடை பெற்று வரும்போது எங்கள் கையை பிடித்து முத்த மிட்டு வாழ்த்திய நிகழ்வு நம்மை கண்கலங்க செய்தது. கனத்த இதயத்தோடு வெளியேறினோம். சக்கரை வியதினால் கால்களில் சில விரல்கள் எடுக்க பட்டு வீட்டில் மட்டுமே நடமாட்டம் வெளியே செல்லும்போது ஆட்டோவில் மட்டுமே செல்வார்கள்.
                சார் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் மறுமை வாழ்விற்கும் துவா செய்ய வேண்டுகிறோம்

Mohideen Abdul Jabbar
                 
             

சனி, 9 பிப்ரவரி, 2013

மேலப்பாளையத்தின் நிகழ்வுகள்


இணையத்தால் இதயத்தை இணைப்போம்
           மேலப்பாளையம் நகரம் இஸ்லாமியர்கள் நிறைந்த மாநகரம். இஸ்லாமியர்கள் சுமார் ஒன்னரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். பலதரப்பட்ட மக்களுடன் உறவு முறை சொல்லி பழகுவார்கள்.பாமர படிப்பறிவு இல்லாத மென்மையான மக்கள்.கொஞ்சம் கொஞ்சம் படித்தவர்கள் கூட நாட்டில் நடந்த சுதந்திர போரில் ஆங்கில மொழியை நாம் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வந்ததால் படிப்பை பாதியில் விட்டு நாட்டுபற்றை காண்பித்த தியாக சீலர்கள். யாரையும் உடனே நம்பி விடுவார்கள்.இரக்க சிந்தனை உடையவர்கள்.யாரவது பசி என கேட்டால் வயிறு நிறைய சாப்பாடு கொடுத்து அனுப்பும் ஈகை குணம் நிறைந்தவர்கள்.வாசலில் வரும் மிஷ்கின்களுக்கு சில்லறை இருந்தால் கொடுப்பார்கள் இல்லை என்றால் மாப்பு செய்ங்கோ என்றோ அல்லது அடுத்த இடம் கேளுங்கோ என்றோ பாணியோடு கூறுவார்கள்.
                               வீடுகளின் மேற்கூரை ஓலைகள் வைத்து கட்டிய ஓலை வீடுகள். தரையில் ஆற்றில் குறுமணலை எடுத்து வந்து தண்ணீர் வைத்து குலைத்து பூசிய தரை பின்பு அந்த நிலை மாறி கொல்லம் ஓடு வந்ததும் வசதி உள்ளவர்கள் மட்டும் மேற்கூரை பணங்கம்பில் ஓடுகள் அடுக்கி ஓட்டு வீடாக மாற்றம் செய்தனர். இன்னும் வசதியானவர்கள் மட்டு வீடு கட்டினார்கள். மட்டு வீடு ஊரில் சொற்பமாகவே இருந்தது.வீட்டுக்கு பாத்திபோட சுண்ணாம்புடன் கருப்பட்டி பால் எடுத்து கலவை செய்த பாத்திகள் மற்றும் சுவர்கள் கட்டியதால் தற்போது அதை  கஷ்டப்பட்டு தான் உடைக்கிறார்கள். அந்த அளவிற்கு உறுதியான கட்டுமானங்கள் இருந்தது. வசதியான வீடுகளில் பர்மாவில் இருந்து தேக்குமரங்கள் கொண்டு வந்து கதவு, ஜன்னல்கள்,உத்திரம் போன்றவைகள் செய்தனர் இன்று அந்த வீடுகளை இடித்து புதிய வீடு கட்டும்போது மரங்கள் நல்ல விலைக்கும் போகிறது.
            தற்போது ஓடுவீடுகள் கான்கிரீட் வீடுகளாக பலமாடிகள் வைத்து நவீன முறையில் கட்டிவருகிறார்கள். தெருவுக்கு குறைந்தது இரண்டு வீடுகளாவது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது இதில் கொடுமை வீடு கட்டி முடிந்ததும் மணல் செங்கல் போன்றவைகளை அப்புறப்படுத்த மட்டும் எண்ணம் பலருக்கு வருவதில்லை. அது போக்குவரத்துக்கு இடையூராகவே இருப்பதும் தெரிவதில்லை மேலும் முடிந்த வரை தெருவை ஆக்கிரமித்து கட்டி தெருவை சுருக்குவது போன்றவைகள் வேதனைக்குறியது. முன்பெல்லாம் தெருக்களில் மணல் லாரிகள் சிரமமில்லாமல் சென்று வந்த காலங்கள் மாறி தெருவின் அகலம் ஆக்கிரமிப்பாளர்களால் குறைக்கப்பட்டு ஆட்டோ செல்வது கூட கடினமாக உள்ளது.பல தெருக்களில் ஒரு செரவு மட்டுமே பயன்படுகிறது. தெருக்களில் போர் போட்டு அதை பாதுக்காக செங்கல் வைத்து கட்டி ஆக்கிரமிப்பு கொடிகட்டி பறக்கிறது.
                                                                                   தொழில்
            முன்பெல்லாம் ஊரில் நெசவுத்தொழில் வீட்டுக்கு வீடு செய்து வந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் காக்குழிகள் இருக்கும். அதிலே சாரம்,நேஞ்சி (துண்டை அப்படிதான் அழைப்பார்கள்). அது நலிவடைந்த பின்பு ஊரில் பீடித்தொழில் வந்தது.தாய்மார்கள் காலை ஆறுமணி அல்லது ஏழு மணிக்கு பீடி தட்டை மடியில் வைத்து குறுக்கு வலியோடு சுற்ற ஆரம்பித்தால் மதியம் சாப்பிட்டு விட்டு பீடிக்கம்பெனிக்கு போகும் வரை தொடர்ந்து சுற்றுவார்கள். கையினால் புகையிலையை வைத்து சுற்றி சுற்றி கையெல்லாம் மஞ்சளாக மாறிவிடும் நிகோடின் கைகளில் படிந்து இருக்கும். மக்களுக்கு ஆஸ்துமா, டி.பி.மற்றும் புற்று நோய்களை வாரி வழங்குகிறது.பெருநாள் மற்றும் சில கந்தூரிகளுக்கு மட்டுமே அவர்கள் நிம்மதியாக இருக்கமுடிகிறது. மறைந்த முஸ்லிம்லீக் தலைவர் சிராஜுல் மில்லத்அப்துல்சமதுசாஹிப்அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு பேச வரும்போதெல்லாம் அல்லாஹ் இந்த மக்களை பீடித்தொழில் இருந்து பாதுகாப்பாயாக என்றும் மாற்று தொழிலை ஆண்மக்களுக்கு வழங்குவாயாக என துவா செய்வார்கள்.
             ஆண்கள் பெரும்பாலும் பீடிகம்பெனிகளில் பண்டல் வேலை, பீடி எடுக்கும் வேலை, இலைதூள் நிறுத்து போடும் வேலை செய்வார்கள். சிலர் சென்னை கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களில் வேலை செய்ய சென்று விடுவார்கள்.
               பள்ளிவாசல்களில் பெரியவர்கள் மட்டுமே தொழுது வந்தார்கள்.சில குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் மட்டுமே ஜும்மா பள்ளியாகும். ஜும்மா நாளில் மட்டுமே கூட்டம் பள்ளிவாசல்களை நிரம்ப செய்யும். மற்ற வக்த்களில் ஒன்று அல்லது இரண்டு சப்புகள் தான் நின்று தொழுவார்கள்.


ஊர்கொந்தும் கட்டுப்படும்
                தெருவுக்கு ஒன்று முதல் இரண்டு கொந்துகள் இருக்கும்.மக்கள் கொந்து எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவார்கள். போலீஸ், கோர்ட்டு என்று போகத நண் மக்கள். ஊர் கட்டுக்கோப்போடு இருந்தது.தெருவில் வரும் பிரச்சனைகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள்  எதுவாக இருந்தாலும் பேசித்தீர்த்துக் கொள்வார்கள்.
                 குடும்பத்தில் அண்ணன் தம்பி விவகாரம் என்றால் ஊர் தலைவருக்கு(கொந்து) சம்பந்த பட்டவர்கள் சொல்லுவார்கள். அவர் கேட்கும் போதே பிரச்சனைகுறியவர்களின் பாதிகோபத்தை குறைத்து விடுவார்.பின்பு இரண்டாம் கட்ட தலைவர்கள் உக்கார்ந்து அவர்களை அழைத்து தனித்தனியாக விசாரித்து பிறகு இருதரப்பினரையும் சேர்த்து பேசி சுமுகமான தீர்வுக்கு வருவார்கள்.
                  தீராத பிரச்சனைகளை பொதுவான இடத்தில் வைத்து தெருவே ஒன்று கூடி விசாரித்து முடிவுசெய்வார்கள்.பெண்பிள்ளைகள் விசயத்தில் வழக்கு பேச அல்லாஹ்வின் பயத்தோடு பேசி சுமுகமான தீர்வு காண்பார்கள்.
                   இப்போது அந்த கட்டுப்பாடுகளை ஒற்றுமையை இழந்து நீதிமன்றங்கள்,காவல்துறை அதிகாரிகள் முன்னால் கைகட்டி கொண்டு அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு வரும் சூழ்நிலை தான்
கல்யாண உறவுமுறைகள்
                   ஊருக்குள்ளேயே பெண்கொடுப்பதும் பெண் எடுப்பார்கள். ஒரு சிலர் வெளியூர்களில் சம்பந்தம் செய்வார்கள்.அந்த காலத்திலே சில பெரிய குடும்பத்து கல்யாணங்கள் என்றால் தெரு முழுவதும் பந்தலும்,விருந்தும் என தடபுடலகாக நடக்கும்.சாதரணமாக கல்யாண சாப்பாடு குடும்பத்தோடு தான் சாப்பிடுவார்கள் தனி நபர் கலந்து கொள்வது இல்லை.ஏழு நாட்கள் விருந்து உபசரிப்பும் இருக்கும். கல்யாணங்கள் இரவு தான் நடக்கும் அதிகாலை ஐந்து மணிவரை நடந்த கல்யாணங்களும் உண்டு.
எழுச்சி
              பீடித்தொழில் செய்து கஷ்டப்பட்டு நோய்களோடு படும் துன்பம் நமது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்ற முடிவில் தனது பிள்ளைகளை படிக்க வைக்க முன் வந்தார்கள். ஆரம்ப பாடசாலைகள், நடுநிலைப்பள்ளிகள், முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி, ரகுமானிய மேல் நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்து நல்ல மாணவமணிகளை உருவாக்கினார்கள்.வறுமையிலும் படிக்க வைத்து பெரும்பாலான மக்கள் அரசு உத்தியோகத்தில் சேர்ந்தார்கள்.
               ஒரு தலைமுறையில் சில மாற்றங்கள் வந்தது.படிக்க வசதி இல்லாத மாணவச்செல்வங்களை சில தனவந்தர்கள் பைத்துல்மால் மூலமாக படிக்க நிதிஉதவிசெய்வதால் நன்கு படித்து இன்று உலகநாடுகள் முழுவதும் பல துறைகளில் கால்பதித்து சாதித்து வருகிறார்கள்.
             நமதூரின் வெளிநாட்டு வருமானம் வருவதற்கு இ.டி.எ கம்பெனி தான் முக்கியமான காரணம்.படித்து முடித்த மாணவர்களை கொண்டு சென்று வேலையும் சொல்லி கொடுத்து கூலியும் கொடுத்து அந்த நிறுவனம் தான்.இன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் இன்று பல கம்பெனிகளில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.

               1992 ம் ஆண்டு பாபரிமஸ்ஜித் இடித்த செய்தி காட்டு தீ போல பரவி ஊரிலும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் துரதிஷ்டவசமாக நடந்துவிட்டது. அதன் பிறகு ஊரிலே பல மாற்றங்கள்
               மது இல்லையேல் இரவில் தூக்கம் இல்லை என திரிந்தவர்கள். தியேட்டரில் புதுபடம் போட்ட அன்று அதிகாலை சென்று படம் பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பும் பலர். ஊரிலே வீண் சண்டைபோட்டு கொண்டு திரியும் சிலர்  என தன் நிலைகளை மாற்றியவர்கள் பலர் அவர்கள் முகத்தில் தாடி வைத்து கொண்டு முகப்பொலியுடன் இமாம் ஜமாஅத்தோடு தொழுவதை காண முடிகிறது. பள்ளிவாசல்களில் ஐந்துவேளை தொழுகையிலும் கூட்டம்தான். மகரிப் இஷா வக்த்களில் பள்ளிவாசல்களில் இடம்கிடைப்பது கஷ்டம்.
எங்கே சென்றது
              ஊரில் ஒரே பெருநாள் என்ற நிலை மாறி . பல பெருநாள்களாக உருவெடுத்து உனக்கு பெருநாள் எப்போது இன்றா? நாளையா? அல்லது நாளை மறுநாளா? என்று கேட்கும் அளவிற்கு பல பெருநாளை கொண்டாடும் விதமாக ஒற்றுமை கொடிகட்டி பறக்கிறது.
                மார்க்க விசயங்களில் பல சீர்திருத்த கருத்துகளை கொண்டு வந்து மக்கள் மத்தியில் புதிய மாற்றத்தை தந்த ஜமாஅத்தும் இன்று பல ஜமாஅத்துக்களாக பல தலைவர்களாக பிரிந்து கூட்டம் அதில் பாதி இதில் பாதி என பல பிளவுகள். சில ஜமாஅத்களும் சில அமைப்புகளும் ஊரில் விஞ்ஞான பிறை பிரச்னையை கொண்டு வந்தது. ஒரு நோன்புபெருநாள் மட்டுமே ஒன்றாக தொழுதனர்.ஹஜ் பெருநாள் பிறையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்து தனியாக தொழுதனர்.அங்கும் ஒற்றுமை குலைந்தது.
                   இன்று கேரளாவில் அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் ஒருமித்த கருத்தோடு ஒரு தலைமையில் இருந்து பல சாதனைகள் புரிந்து உள்ளர்கள. உதாரணமாக கேரளாவில் முஸ்லிம்களுக்கு பனிரெண்டு சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலீம்களுக்கு கல்லூரி பேராசிரியர்கள் போல அரசாங்க சம்பளம் என முஸ்லிம்களுக்கு சலுகைகளும்,உரிமைகளும் கிடைகிறது நம்மால் ஏன் முடிவதில்லை நமக்குள்ளே பல அமைப்புகள் ஒரு அமைப்பினர் மற்ற அமைப்பினருக்கு ஸலாம் சொல்ல கூட மனம் வருவதில்லை. சமுதாய பொது பிரச்சனைகளுக்கு கூட தனிதனியேபோராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் என நமது ஒற்றுமையை அரசாங்கத்திற்கு காட்டுகிறோம். அரசும் நாம் இப்படி இருப்பதை தான் விரும்புகிறது. எண்ணூறு ஆண்டுகாலம் ஆண்ட சமுதாயம் இன்று அடிமைபட்டு பல மாநிலங்களில் அகதிகளாக விரட்டப்படும் நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.
          வல்ல ரஹுமான் நம் அனைவரையும் ஒற்றுமையோடு இருக்க கிருபை செய்ய துவா செய்வோம்.
                
Mohideen Abdul Jabbar