வாரீர்! மேலப்பாளையம் பெருநாள் பாரீர்!!!
மேலப்பாளையத்தின் பெருநாள் தினத்தை என்று நினைத்தாலும் நாம் எந்த நாட்டில் இருந்தாலும் பசுமையான அந்த நினைவுகள் நம் மனதை சந்தோஷ கடலில் ஆழ்த்தும்.
நோன்புபெருநாள் என்றால் மூன்று தினங்களும் ஹஜ் பெருநாள் என்றால் ஐந்து நாட்களும் கொண்டாட்டம் தான் எல்லா தெருக்களும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் காணப்படும்.
பிறைபார்த்தல்
ஷாபான் மாதம் கடைசிநாள் மகரீப் தொழுகை முடிந்ததும் ஆண்மக்களும், தலையில் முட்டாக்குடன் பெண்மக்களும் சிறுவர்கள் புடைசூழ மேற்குப் பகுதியை நோக்கி பிறை தென் படுகிறதா என ஆவலுடன் பார்க்க யாரவது ஒருவர் கண்ணுக்கு தெரிந்து விட்டால் அங்கன பாரு பிறை தெரிகிறது என ஒருவருக்கு ஒருவர் சந்தோசத்தை பரிமாறி கொள்வார்கள்.
அவ்வாறு காணத பட்சத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து தகவல்கள் வரும் நாளை நோன்பு என உடனே பக்கீர்ஷாப்மார்கள் தெருதெருவாக ஒருவகையான பைத் சொல்லி வருவார்கள். அதைபோல நள்ளிரவில் தய்ரா அடித்துகொண்டு மக்களை ஷஹர் வைப்பதற்கு தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுவார்கள். சில வீட்டு தாய்மார்கள் அந்த நேரத்திலும் அவர்களுக்கு காசு கொடுத்து தங்களின் ஈகைகுணத்தை வெளிபடுத்துவார்கள்.இது போக வட்டாரத்தில் முதலில் எழுந்தவர்கள் அக்கம்பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று கதவை தட்டி எழுப்புவார்கள்.அனைத்து தெருக்களிலும் அந்த நேரம் சந்தோஷமாகவும் பரபரப்பாக இருக்கும். இரவில் பள்ளிவாசல்களில் தராவிஹ் தொழுகை நடைபெறும்.
வசதி உள்ளவர்கள் உடனே புதியஆடைகளை தங்களது கும்பத்தாருக்கு வாங்கிவிடுவார்கள்.பெரும்பாலும் பீடிகம்பெனிகளில் போனஸ் போட்ட உடன் நமதூரிலே துணிமணிகள் வாங்குவார்கள். நமதூரில் உள்ள கொப்புளி, காட்டுவா, நூர்ஜஹான், ராஜா, ஹக்கிம் போன்ற ஜவுளி கடைகளில் கூட்டம் கூட்டமாக தரையில் அமர்ந்து ஜவுளி எடுப்பார்கள். அவர்களும் மக்களுக்கு கடன் கொடுத்து வாங்குவார்கள்.
வயதான பெண்களுக்கு சீட்டிவேஷ்டியும் வெள்ளைநிற துப்பட்டாவும்,குமரி பெண்களுக்கு பாவாடை தாவணி சிறுவர்களுக்கு சந்தப்பா வேஷ்டி பெரியவர்களுக்கு கிப்ஸ்மார்க் லுங்கி ஒருசிலர் பேண்ட் எடுப்பார்கள். ஜவுளிகடைகள் நள்ளிரவு வரை களைகட்டும் ஜங்ஷன் டவுண் பக்கமே செல்லாமல் நமதூரிலே எடுக்கும் நண் மக்கள்.
கம்ஷாவும் தமாமும்
மதரசாகளிலும் வீடுகளில் வைத்து ஓதிகொடுக்கும் இடங்களில் கம்சா நடக்கும். அது என்ன கம்சா பள்ளிக்கூடங்களில் நடக்கும் பேர்வேல்டே போல ஓதும் சிறுவர்களுக்குநடக்கும் சிறிய விழா. இதில் மூசிலெப்பை ரொம்ப பிரபலம் காரணம் ஊரில் உள்ள முக்கியமான ஆலீம்பெருமக்கள் அங்கு தான் ஓதினார்கள். இதுபோக கோசாலெப்பை போன்றவர்களின் வீடுகளில் நடக்கும். கம்சா அன்று காலையில் சிறுவர், சிறுமிகள் புத்தாடைகள் அணிந்துகொண்டு வீட்டில் இருந்து மழலைகள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வரும்போது காண கண்கள் வேண்டும்.சில பைத்கள் ஓதி நேர்ச்சை வழங்கி அன்று முதல் மதரசா ரமலான் விடுமுறை விடப்படும்.
இரவில் தராவிஹ் தொழுகைக்கு குரான் முப்பது ஜூஸ்வு ஓதிமுடிக்கப்பட்டு பள்ளிவாசல்களில் தமாம் செய்வார்கள். பள்ளிவாசல்களில் நோன்பு இருபத்தைந்து முதல் இருபத்திஒன்பது வரை தமாம் செய்வார்கள்.
தமாம் அன்று மகரிப் தொழுகை முடிந்து பள்ளியின் மோதினார் தலைமையில் சிறுவர்கள் அந்தபள்ளியின் பெயரை சொல்லிவருவார்கள். உதாரணமாக காட்டுபள்ளிவாசல் தாமம் என்றால் காட்டுப்பள்ளி தமாமுக்கு வாருங்கோ நேர்ச்சை இருந்தா போடுங்கோ என்று சேக் வண்டி தள்ளிகொண்டு வருவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் வாழைப்பழம் கொடுப்பார்கள் சேக்வண்டி நிறையும் அளவிற்கு பழம் சேர்ந்து விடும். பள்ளிவாசலில் தொழுகை முடிந்து தொழ வைத்த இமாமை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் சேர்ந்து வீட்டுக்கு கொண்டு விடுவார்கள். இமாம் வீட்டில் வந்தவர்களுக்கு ரஸ்னா கொடுத்து உபசரிப்பார்கள்.
இருப்பத்தேழு இரவு
நோன்பு இருப்பத்தேழு இரவு புனிதமான லைலத்துல் கத்ரு இரவு என ஒரு எண்ணம் உண்டு.அன்று இரவில் அனைத்து பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை நடைபெறும். வீடுகளில் ராந்தால் நட்சத்திர வடிவிலும், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் போன்ற வடிவங்களில் செய்து அதில் குண்டுபல்பு போட்டு தொங்க விடுவார்கள். தற்போது அந்த நிலை மாறி சீரியல் செட் போடுகிறார்கள். சிறுவர்கள் புத்தாடை அணிந்து வாட்டரம் மற்றும் சொந்தகாரர்களின் வீடுகளுக்கு சென்று காட்டி மகிழ்வார்கள் பெரியவார்கள் அச்சிறுவர்களுக்கு காசு கொடுத்து அழகு பார்ப்பார்கள்.காலையில் ஒவ்வொரு வீட்டிலும் வசதிக்கு ஏற்றவாறு சில்லறை காசுகள் மாற்றி வைப்பார்கள். வாசலில் வரும் மிஸ்கின்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பார்கள்.
மூஞ்சா
ஊரில் பெருநாள் வந்தால் சிறுவர்கள், குமரிகள், கல்யாணம் ஆன பெண்கள், வாலிபர்கள் மரத்தில் கொச்சை கயிறால் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள்.நோன்பு இருப்பத்தேழில் வாப்பாமார்களிடம் சிறுபிள்ளைகள் மூஞ்சா போட்டு தாங்கோ என நச்சரிப்பில் கடைக்கு சென்று கொச்சை கயிறு வாங்கி வந்து வாளி தண்ணீரில் கயிற்றை நலைத்து கட்டும் போதே ஏலே எங்க வாப்பா மூஞ்சா கட்டா கயிறு வேங்கி வந்துர்கார்லே வாலே பாக்கா என்று சந்தோஷத்துடன் தனது தோழர்,தோழிகளிடம் சொல்லுவார்கள்.
ஒன்னு கமலக்க கண்ணு
ரண்டு ராஜாக்கு செண்டு
மூனே முருங்க பட்ட தோடு
நாலே நாய் குட்டி வாலு
அஞ்சே பஞ்சா பறக்கு
ஆறே ஆணைக்கு மேலே காரு
ஏழு எம் பேச்சே கேளு
எட்டே டமா டமா கொட்டு
ஒம்போதே ஓட்ட பான சட்டி
பத்தே பாளையங்கோட்டை ராஜாவுக்கு விடிய விடிய கல்யாணம் விடிஞ்சி பாத்தா புளியானம்
பாலும் பலமும் பக்கத்துல வச்சி.....
கோயா மூஞ்சா கேக்காதே கேக்குவேன்......
போன்ற பாடல்கள் பாடி முடியும் வரை ஒருவர் ஆடலாம்
பெண்கள்தாயம், சோவி, கால்கா ,பாண்டி, குச்சி குச்சி தாம்பூலம், பாம்புஅட்டை ஆகிய விளையாட்டு விளையாடுவார்கள். வாலிபர்கள் நடுத்தெருவில் குறுக்கே கயிறு கட்டி அதிலே அரிசி முறுக்கு கட்டி சைக்கிளில் வந்து கடிக்கும் விளையாட்டும், கயிற்றில் உடைந்த மண் பானை கட்டி ஒருவர் கண்ணை கட்டி கையில் ஒரு விறகு கம்பை கொடுத்து தூரத்தில் விட்டு விடுவார்கள் அவர் கண் தெரியாமல் அந்த பானையை உடைக்க வேண்டும் அற்புதமான் விளையாட்டுக்கள் இரவில் டீப்பு லைட் கட்டி கபடி விளையாட்டு போன்ற விளையாட்டுகள் மூன்று தினங்கள் நடக்கும்.
பெருநாள் பிறை
நோன்பு இருபத்திஒன்பது அன்று மகரிப் தொழுகை முடிந்து பிறை தென்படுகிறதா என பார்ப்பவர்கள்.பிறை தென்படவில்லை என்றால் மக்கள் நோன்பு வைப்பதற்கு தயாராக இருப்பார்கள். முன்பெல்லாம் நள்ளிரவில் பெருநாள் அறிவிப்புகள் வரும் ஏன் ஒரு தடவை சகர் வைத்து ஸுபுஹ் தொழுகையில் பெருநாள் அறிவிப்புகள் வந்ததுண்டு.
பெருநாள் இரவு பசாரில் கால் வைப்பதற்கு இடம் இருக்காது அந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் அலைகடல் என கூறிவிடுவர்.தையல் கடைகாரர்கள் பாடுதான் கஷ்டம் தீடீர்னு பெருநாள் வந்தால்.
கண்ணகி டாக்கீஸ்
ஊரில் இருக்கும் ஒரே தியேட்டர் இதில் ஒரு கொடுமை புனிதமான ரமலான் நோன்பு அறியாமையின் பொருட்டால் பல பெண்கள் படம் பார்த்து கொண்டே நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று நினைத்தாலும் அல்லாஹ்வின் பயம் நம்மை வாட்டுகிறது அல்லாஹ் அந்த அறியாத மக்களை மன்னிப்பானாக ஆமீன்
பெருநாள் அன்று கண்ணகி டாக்கீசில் புதிய படம் சின்னாமது அப்துல்காதர் போட்டு விடுவார்.பெருநாளை முன்னிட்டு காலைஷோ, மேட்னி ஷோ, முதல்ஷோ, இரவுகாட்சிகள். நமதூரில் இரவுகாட்சிக்கு இரண்டாம்பிள்ளைஆட்டம் என வயதான பெண்கள் அழைப்பார்கள் கூட்டம் டிக்கெட் கிடைக்காமல் அடுத்த காட்சிக்கு காத்திருந்து படம் பார்த்த பிறகே வீட்டிற்கு செல்வார்கள்.
ஷங்சன் டவுண் போன்ற இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் நமதூர் மக்களின் கூட்டம் அலைமோதும்.
ஆறு நோன்பு பெருநாள்
நோன்பு பெருநாள் முடிந்த மறுநாள் ஆறுநோன்பு ஆரம்பம் ஆகும். பெரும்பாலும் முதியவர்கள் தான் வைப்பார்கள். ஆறுநோன்பு முடிந்ததும் ஆறு நோன்பு பெருநாள் எல்லோரும் கொண்டாடுவார்கள்.
வல்ல ரஹ்மானின் கிருபையினால் இந்த நிலைகள் எல்லாம் மாறி பெண்கள் மத்தியில் பலமாற்றங்கள் வந்து விட்டது. தொழுகையிலும், இந்த ரமலான் மாதத்தில் ஊரில் நடந்த பெண்கள் பயானில் பரிபூர்ணமாக கலந்து கொண்டனர்.மார்க்கத்தை விளங்கியவர்களாக ஹஜ், உம்ராக்கள் செய்ய ஆர்வமுடன் இருக்கிறார்கள்.ஆறு நோன்பின் மகத்துவம் விளங்கி பெரும்பாலும் வைக்கிறார்கள் பெண்பிள்ளைகள் படிப்பதற்கு ஆர்வத்துடன் செல்லுவதும் மட்டும் அல்லாமல் மதிப்பெண்கள் எடுப்பதில் மாணவர்களை விட அதிகமார்க் எடுக்கிறார்கள் பெண்களுக்கு என்று முஸ்லிம்பெண்கள் மேல் நிலைப்பள்ளி அன்னை ஹாஜரா கல்லூரி அமைய பெற்று இருப்பது பெண்களுக்கு வரப்பிரசாதம் அதை பெண்கள் நன்கு பயன்படுத்துவதில் அக்கறையும் ஆர்வமும் காட்டுவது மன மகிழ்ச்சி அளிக்கின்றது.
Mohideen Abdul Jabbar