செவ்வாய், 23 அக்டோபர், 2012

மர்ஹும் டிராயிங் மாஸ்டர் அப்துல்ரகுமான் சார் அவர்கள்


முஸ்லிம்மேல்நிலைப்பள்ளியின் மரியாதைக்குரிய ஆசான்கள்
              மேலப்பாளையம் முஸ்லிம்மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் என்றும் மரியாதைக்குரியயவர்கள். பல்லாயிரக் கணக்கான மாணவச் செல்வங்களை பவளமுத்துக்களாக விலை மதிக்க முடியாத வைரகற்களாக கூர்படுத்தியவர்கள். மாணவர்களை செவ்வனே தயார் செய்து உலக நாடுகளில் சுற்றி சுழன்று பணி செய்யும் நல்ல பண்பாளர்களை,கல்வியாளர்களை சமுதாயத்திற்கு தந்த அந்த சாதனையாளர்களின் பெருமைகளை நாம் என்றும் நினைத்து பெருமை படவேண்டும். முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முஸ்லிம்களால் நடத்தபட்டாலும் பாகுபாடு இல்லாமல் அனைத்து மத ஆசிரியர்களை சரிசமமாக பணியில் அமர்த்தி சமுகத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கும் சிறந்த நிர்வாகம் ஆகும்.
டிராயிங் மாஸ்டர் அப்துல்ரகுமான் சார் அவர்கள்
              டிராயிங் மாஸ்டர் என்று அன்போடு அழைக்ககூடிய மரியாதைக்குரிய அப்துல் ரகுமான் சார் அவர்கள் மீது மாணவர்களிடத்தில் ஒரு பெரும் மரியாதை உண்டு. அவர்களின் நடை, அணிந்து இருக்கும் கண்ணாடியின் நேர்த்தி, அவர்களின் மிடுக்கு என்றும் நம் மனதில் நிற்கும். அவர்கள் வருகிறார்கள் என்றால் அந்த இடமே நிசப்தமாக ஒழுக்கமாக மரியாதைகள் ஓங்கி முகத்தில் ஒருவிதமான பயத்தோடு காட்சி தருவார்கள். அப்போதே பேண்ட்,ஷர்ட் இன் செய்து ஸ்டைலா தான் இருக்கும் அவர்களின் தோற்றம்.அவர்கள் பக்கத்தில் சென்றாலே பிஸ்கட் பவுடர் வாசம் அற்புதமாக அவர்களின் மீது இன்னும் மரியாதையை கூட்டும் முகமாக இருக்கும்.  
               ராஜ்தூத் என்ற இருசக்கர மோட்டார் பைக்கில் தான் வருவார்கள்  அதன் பிறகு சுசுகி பைக்கில் வந்தார்கள்.கொள்ளபேர் தினமும் அதை அருகில் சென்று பார்த்து செல்வார்கள்.காரணம் அப்போது தான் ஷோ ரூம்பில் இருந்து வந்ததுபோல எப்போது பார்த்தாலும் பளபள வென்று இருக்கும். நான் உட்பட பலர் அவர்கள் செல்லும் அழகை நின்று பார்த்து,ரசித்து செல்வோம். இன்னும் சொல்லப்போனால் அந்த இரண்டு வகை பைக்குகளும் மாணவர்கள் அப்போது தான் பார்த்து இருப்பார்கள். மாணவர்களிடத்தில் சுத்தம், அப்போதே மூடநம்பிக்கையை எதிர்த்து பேசுவார்கள் மற்றும் சுகாதாரத்தை அதிகமாக எடுத்து சொல்லுவார்கள்.
               ஆறாவது வகுப்பு முதல் பன்னிரெண்டாவது வகுப்பு வரை வகுப்பு எடுப்பார்கள் வாரத்தில் ஒரு வகுப்பிற்கு இரண்டுமுறை தான் பிரியடு இருக்கும். அந்த இரண்டு பிரியடும் வகுப்பறை நீட்டாகயும்,மாணவ,மாணவிகள் அமைதியாகயும் இருப்பார்கள்.
             பழைய கட்டிடத்தில் ஒரு வகுப்பறைக்கும் இன்னொன்றுக்கும் இடையே அரைவாசி சுவர்மட்டும் தான் இருக்கும். ஆறாவது பிரிவு அ முதல் ஈ வரை ஒரு வகுப்பறையில் மாணவர்கள் பேசும் பேச்சுக்கள் சத்தம் அனைத்தும் கேட்கும்.
             பக்கத்து வகுப்புக்கு சார் வரவில்லை என்றால் மாணவர்கள் சத்தம் தாங்க முடியாது அந்த அளவிற்கு சந்தைகடைபோல இருக்கும். பக்கத்து வகுப்பில் சார்பிரியடு என்று தெரிந்தாலே மயான அமைதி ஏற்படும். அந்த பிரிவின் வகுப்புத் தலைவன் கட்டுகோப்பாக வைத்து இருக்க பெரும் பாடுபடுவான்.அதையும் மீறி சேட்டை செய்யும் மாணவர்களை கையில் பெரிய சாட்டை கம்போடு அழைத்துவருவான். அவர்களை சார் அவர்கள் எச்சரித்து அனுப்புவார்கள்.
மீராபள்ளிவாசல் கொடிக் களை
                                 சார்வாள் அவர்களின் நகைச்சுவை பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம் அவர்கள் பேசஆரம்பித்து விட்டால் வகுப்பறை சிரிப்பு சத்தமாக தான் இருக்கும் அதைவிட அந்த நகைச்சுவை அறியுரையை புகட்டுவதுதாக இருக்கும். ஆறாவது வகுப்பில் மாணவர்களின் உயரம் குள்ளமாக தான் இருப்பார்கள்.அதைவிட சில மாணவர்கள் சற்று உயரமாக இருப்பார்கள். அவர்கள் எதாவது சேட்டை பண்ணினால் மீராபள்ளிவாசல் கொடிகளை என்று சொல்லி அழைப்பார்கள்.அதேபோல சிலமாணவர்களின் குரல் முரட்டு தனமாக இருக்கும்.அமைதியான சூழ்நிலையில் அவர்கள் பேச்சி துல்லியமாக கேட்கும் அதற்க்கு சார் அவர்கள் யார்லே பெரியமனிதன் குரலில் பேசுவது என்றும், சாரை கண்டு பாவலாகட்டும் (நல்லபையன்போலநடிப்பது) பையன்களை வலாபா என்று அழைப்பார்கள்.
அன்பும் அரவணைப்பும்
                 ஏழை, எளிய மாணவர்களிடம் அன்போடுஅரவணைத்து செல்வார்கள். எல்லா மாணவர்களிடமும் பாகுபாடு இல்லாமல் சரிசமமாக பாவித்து செல்வார்கள்.இன்று ஒருபடத்தை வரைய வேண்டும் என்று நினைக்கும் போதே அவர்களின் நினைவுகள் வந்துவிடும்.ஆறாவது வகுப்பில் ஒரு அடி ஸ்கேல் அறிமுக படுத்தி அதில் உள்ள அளவுகளையும் அதை எப்படி பயன்படுத்துவது ஒரு காட்சியை எப்படி வரைய வேண்டும். நோட்டில் மத்திகோடு போடுவது முதல் வரையும் வரை அனைத்தையும் நுட்பமாக கற்றுதந்தவர்கள். அளவுக்கு ஒரு நோட்பேப்பர் பயன்படுத்தி பல ஓவியங்களை மக்கு பையன்களும் படம் வரையும் திறமையை வளர்த்து விடுவார்கள்.வரைந்த படத்தை சுற்றி கருப்பு சிகப்பு பார்டர் போட்டு, நோட் நீட்டாக இருந்தால் மாணவர்கள் அணிந்து இருக்கும் ஆடைகள் நீட்டாக இருந்தாலும் மார்க் கொஞ்சம் அதிகமாக போடுவார்கள்.
                 பள்ளிகூடத்தில் நடக்கும் அத்தனை கலை நிகழ்ச்சிகள் மற்றும் மந்திரதந்திர காட்சிகள்,இன்பசுற்றுலா செல்வது போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் அவர்களின் பங்கு அதிகமாக இருக்கும்.
                   பெல் அடித்த உடன் பலர் உள்ளே செல்லாமல் சாவகாசமாக வருவார்கள் அதை சிறிய பைன் மூலம் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.மாணவர்கள் அவசியமில்லாமல் விடுமுறை எடுப்பது போன்ற மாணவர்களின் நலனிலும் பள்ளிகூடநலனிலும் நல்ல ஆர்வம் கொண்டு சீரிய முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்கள். 1993 ஆம் ஆண்டு பணிநிறைவு செய்தார்கள்.1996 ம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் தேதி இறைவனடி சேர்ந்தார்கள் அன்னாரின் மக்பிரத்துக்காக நாம் அனைவரும் துவா செய்யஅன்புடன் வேண்டுகிறோம்.
                                          படித்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் மேலும் எனது இமெயில் முகவரி majabbarmpm@gmail.com

Mohideen Abdul Jabbar

             

செவ்வாய், 11 செப்டம்பர், 2012


நம்மைவிட்டுமறைந்து போன விளையாட்டுக்கள்
                  மேலப்பாளையத்தில் இருபது வருடங்களுக்கு முன்பாக தெருவில் கூட்டம் கூட்டமாக கூடி அற்புதமாக ஆனந்தமாக சிறுவர்கள் விளையாடுவார்கள்.பலவகையான விளையாட்டுகள் இருந்தது ஒவ்வொரு விளையாட்டும் சில காலங்கள் என பிரித்து விளையாடுவார்கள். எல்லா தெருக்களிலும் ஒரே மாதிரியான விளையாட்டுக்கள் தான் இருக்கும்.வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாட்டை மறந்து விளையாட்டுக்கள் நடக்கும்.விளையாட்டால் சிறுபிள்ளைகள் சண்டை பெரியவர்களுக்கு இடையே அப்பஅப்ப வந்து போகும்.
விளையாட்டுக்கள்
கோலிக்காய்:
                கோலிக்காவை வைத்து அதிகமான விளையாட்டுகள் உள்ளன. இரண்டு கோடுகள் போட்டு இரண்டு முதல் பத்துபேர்கள் விளையாடும் விளையாட்டு அச்சாபரக்கா, சுவரை ஒட்டி பானா வடிவில் கோடுபோட்டு லாக், தெருவில் சிறிய நான்குஇஞ்ச் அளவில் குழி தோண்டி சான் சம்பர் குத்து மற்றும் பொக்கு.டோனிராஜா என விளையாடுவார்கள்
பம்பரமும் அம்பிபிடிப்பதும்:
                பெரிய வட்டகோடு போட்டு மாம்பழகொட்டையினை நடுவில் வைத்து ஆரம்பிக்கும் விளையாட்டு பம்பரம். கொட்டையை பம்பரத்தால் குத்தில் கோட்டை விட்டு வெளியே எடுக்க வேண்டும் ஒருவர் குத்தி வெளியேற்றினால் மற்றவர்கள் அம்பிபிடிக்க வேண்டும் கடைசியாக யார் அம்பி பிடிக்கிறார்களோ அவனின் பம்பரத்தை நடுவில் வைத்து விளையாட்டு ஆரம்பம் ஆகும். நாம் குத்து வது கீழே வைக்கபட்டு இருக்கும் பம்பரத்தில் படவேண்டும் இல்லை என்றால் யார்பம்பரம் படவில்லையோ அவனின் பம்பரத்தை வைக்க வேண்டும் இப்படி மாறி மாறி வைத்து போட்டி போட்டு அந்த பம்பரத்தை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கடத்தி சென்று கடைசியில் யார் பம்பரம் எல்லைக்கு வருகிறதோ அந்த பம்பரத்தை எல்லாரும் சேர்ந்து நங்கு வைப்பார்கள் நங்கு வைப்பதற்கு என்றே கூர்மையான ஆணி போட்டு வைப்பார்கள் பம்பரத்தில் ஐந்துநங்கு முதல் ஐம்பது நங்கு வரை வைத்து பாமபரத்தை உடைக்கும் வரை நங்கு குத்துவார்கள்.சில பேர்களின் தலை மற்றும் கால்களையும்,வீட்டு திருணையில் பீடிசுற்றும் பெண்கள் மீது பம்பரங்கள் தெறித்து ஓடும் அளவிற்கு தனது சக்தியை ஓன்று திரட்டி குத்துவார்கள். இந்த வகை விளையாட்டை இரண்டு முதல் பத்துபேர்கள் வரை விளையாடுவார்கள்

தெளுக்காய்
               தெளுக்காய் என்ற சிறிய கொட்டையை ஒன்று ஒன்றாக நிற்க வைத்து சிறுவர்களின் தகுதிக்கு ஏற்ப தூரத்தில் நின்று குறிபார்த்து அடிப்பது.
               கபடி விளையாட்டு ஒரு தெருவோடு ஒரு தெரு மோதும் அதை காண கூட்டம் அலைமோதும் குறிப்பாக மாலையில் ஆரம்பித்து இரவு வரை நடக்கும் டியூப்லைட் கட்டி பிரமாண்டமாக நடக்கும்


குச்சிக்கம்பு(அந்தகால கிரிக்கெட்)
                 தாய்மார்கள் அதிகம் பயப்படும் வீரவிளையாட்டு பலபேர்களின் கண்களை பதம்பார்த்த விளையாட்டு. தெருக்களில் விளையாடும் போது பல பீடிதட்டுகளை மடியில் இருந்து கவிழ்த்து புகையிலை மற்றும் பீடிஇலைகளை மண்ணில் கொட்டி சண்டைகள் வருவதும் உண்டு.இந்த விளையாட்டும் இரண்டு முதல் பத்துபேர்கள் வரை இரண்டு டீம் பிரித்து விளையாடலாம் ஸ்கோர் உண்டு தரையில் கோடுகீச்சி ஒருசான் அளவுஉள்ள குச்சியை(கில்லி),ஒருமுழங்கை அளவு உள்ள அடிகம்பு மூலமாக கில்லியை கில்லிவிடுவர் எதிர் டீம்மில் இருக்கும் ஆள்கள் கில்லியை கேட்ச் பிடித்தால் அவுட் இல்லைஎன்றால் கீழே விழுந்த கில்லியை எடுத்து பால்விசுவது போல எறிவார் அதை பேட் வைத்து அடிப்பது போல் கம்பு வைத்து அடிப்பார் அந்த இடத்தில் இருந்து சாட் அடித்து எவ்வளவு தூரம் கில்லி போகுதோ அவ்வளவு பாய்ண்டு(ரன்) இரண்டு டீம்களில் யார் அதிகமான பாய்ண்டு எடுக்கிறார்களோ அந்த டீம் வெற்றி பெற்றதாக கருதப்படும்.பாய்ண்டு கணக்கை கோட்டை கணக்கில் சொல்லுவார்கள்.
எறிபந்து
                     சிறிய கல் வைத்து அதன் மேல் துணிகளை சுற்றி பந்துபோல செய்து அதை ஒருவர் மீது ஒருவர் வீசுஎறிவார்கள்.எறியும் போது முதுகில் பட்டால் சிறிதாக வலிக்கும்.
                     கள்ளன்போலீஸ்,ஐஸ்பால்வருகிறேன்,தொட்டுபிடித்து, கல்லா மண்ணா,சிகரெட் அட்டையை வைத்து சீட்டு விளையாட்டு,கபடி,காற்று நேரத்தில் பட்டம், பனைஓலையில் காத்தாடி போன்ற விளையாட்டுகள் விளையாடப்படும்.



பெண்கள் விளையாட்டு
                          அந்த காலத்தில் கல்யாணவீடுகளில் பந்தல் போட்டு பந்தல் உள்ளே ஆற்று மணல் அடிப்பார்கள். அந்த மணலில் மண்ணை கூட்டி குச்சிகுச்சி தாம்பூலம்,பாண்டி,கல்காய்,தாயம்,பாம்புஅட்டை,பல்லாங்குழிபோன்றவிளையாட்டு களை சின்னபிள்ளைகள் முதல் கல்யாணம் ஆனவர்கள் வரை விளையாடுவார்கள்
வீடுகளில் மூஞ்சா
                     நோன்பு இருபத்தியேழு ராத்திரியில் எல்லா சின்னபிள்ளைகளுக்கும் பெருநாளுக்கு எடுத்த புதிய துணிகள் போட்டு சொந்தபந்தங்கள், வட்டாரத்தில் உள்ள வீடுகளில் கொண்டு காட்டுவார்கள் அப்படி போகும்போது பெருநாள் காசுகள் கிடைக்கும் எல்லா சிறுவர்களுக்கு வீடுகளில் உள்ள பணங்கம்புகளிலும், தெருக்களில் உள்ள மரங்களில் கொச்சை கயிறு வாங்கி அதை வாலி தண்ணீரில் ஊறவைத்து மூஞ்சா கட்டி ஒவ்வொரு ஆட்களாக ஆடுவார்கள். ஆட்டத்தை கணக்கு வைக்க ஒன்று முதல் பத்து வரை ஒரு பாட்டு உண்டு
                       ஒன்று கமலக்க கண்ணு, இரண்டு ராஜா வீட்டு செண்டு, மூன்று முருங்கை பட்டைதோடு, நாலு நாய்க்குட்டிவாலு ஐந்து பஞ்சாபறக்குது, ஆறே ஆணைக்குமேலேபாரு, ஏலே என்பேச்சே கேளு, எட்டு டம டம கொட்டு, ஒன்பதே பாளையங்கோட்டை ராஜாவிற்கு விடியவிடிய கல்யாணம் விடிந்து பார்த்த புளியாணம் மற்றும் ஒரு குடம் தண்ணீ எடுத்து ஒரு பூ பூத்தது.......
                      அதன் பிறகு தான் ஜெஸ்,கேரம்போர்டு,கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் பரவலாக விளையாடபட்டது
                     அந்த காலம் போன்று இனி எங்கே வரப்போகிறது என்று யாரிடம் கேட்டாலும் அந்த நினைவுகளை பசும்மையாக பகிர்ந்து கொள்கிறார்கள்

Mohideen Abdul Jabbar
                 

            

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

வாரீர்! மேலப்பாளையம் பெருநாள் பாரீர்!!!


வாரீர்! மேலப்பாளையம் பெருநாள் பாரீர்!!!
              மேலப்பாளையத்தின் பெருநாள் தினத்தை என்று நினைத்தாலும் நாம் எந்த நாட்டில் இருந்தாலும் பசுமையான அந்த நினைவுகள் நம் மனதை சந்தோஷ கடலில் ஆழ்த்தும்.
                 நோன்புபெருநாள் என்றால் மூன்று தினங்களும் ஹஜ் பெருநாள் என்றால் ஐந்து நாட்களும் கொண்டாட்டம் தான் எல்லா தெருக்களும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் காணப்படும்.
பிறைபார்த்தல்
                ஷாபான் மாதம் கடைசிநாள் மகரீப் தொழுகை முடிந்ததும் ஆண்மக்களும், தலையில் முட்டாக்குடன் பெண்மக்களும் சிறுவர்கள் புடைசூழ மேற்குப் பகுதியை நோக்கி பிறை தென் படுகிறதா என ஆவலுடன் பார்க்க யாரவது ஒருவர் கண்ணுக்கு தெரிந்து விட்டால் அங்கன பாரு பிறை தெரிகிறது என ஒருவருக்கு ஒருவர் சந்தோசத்தை பரிமாறி கொள்வார்கள்.
                  அவ்வாறு காணத பட்சத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து தகவல்கள் வரும் நாளை நோன்பு என உடனே பக்கீர்ஷாப்மார்கள் தெருதெருவாக ஒருவகையான பைத் சொல்லி வருவார்கள். அதைபோல நள்ளிரவில் தய்ரா அடித்துகொண்டு மக்களை ஷஹர் வைப்பதற்கு தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுவார்கள். சில வீட்டு தாய்மார்கள் அந்த நேரத்திலும் அவர்களுக்கு காசு கொடுத்து தங்களின் ஈகைகுணத்தை வெளிபடுத்துவார்கள்.இது போக வட்டாரத்தில் முதலில் எழுந்தவர்கள் அக்கம்பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று கதவை தட்டி எழுப்புவார்கள்.அனைத்து தெருக்களிலும் அந்த நேரம் சந்தோஷமாகவும் பரபரப்பாக இருக்கும். இரவில் பள்ளிவாசல்களில் தராவிஹ் தொழுகை நடைபெறும்.
                  வசதி உள்ளவர்கள் உடனே புதியஆடைகளை தங்களது கும்பத்தாருக்கு வாங்கிவிடுவார்கள்.பெரும்பாலும் பீடிகம்பெனிகளில் போனஸ் போட்ட உடன் நமதூரிலே துணிமணிகள் வாங்குவார்கள். நமதூரில் உள்ள கொப்புளி, காட்டுவா, நூர்ஜஹான், ராஜா, ஹக்கிம் போன்ற ஜவுளி கடைகளில் கூட்டம் கூட்டமாக தரையில் அமர்ந்து ஜவுளி எடுப்பார்கள். அவர்களும் மக்களுக்கு கடன் கொடுத்து வாங்குவார்கள்.
                   வயதான பெண்களுக்கு சீட்டிவேஷ்டியும் வெள்ளைநிற துப்பட்டாவும்,குமரி பெண்களுக்கு பாவாடை தாவணி சிறுவர்களுக்கு சந்தப்பா வேஷ்டி பெரியவர்களுக்கு கிப்ஸ்மார்க் லுங்கி ஒருசிலர் பேண்ட் எடுப்பார்கள். ஜவுளிகடைகள் நள்ளிரவு வரை களைகட்டும் ஜங்ஷன் டவுண் பக்கமே செல்லாமல் நமதூரிலே எடுக்கும் நண் மக்கள்.


கம்ஷாவும் தமாமும்
                  மதரசாகளிலும் வீடுகளில் வைத்து ஓதிகொடுக்கும் இடங்களில் கம்சா நடக்கும். அது என்ன கம்சா பள்ளிக்கூடங்களில் நடக்கும் பேர்வேல்டே போல ஓதும் சிறுவர்களுக்குநடக்கும் சிறிய விழா. இதில் மூசிலெப்பை ரொம்ப பிரபலம் காரணம் ஊரில் உள்ள முக்கியமான ஆலீம்பெருமக்கள் அங்கு தான் ஓதினார்கள். இதுபோக கோசாலெப்பை போன்றவர்களின் வீடுகளில் நடக்கும். கம்சா அன்று காலையில் சிறுவர், சிறுமிகள் புத்தாடைகள் அணிந்துகொண்டு வீட்டில் இருந்து மழலைகள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வரும்போது காண கண்கள் வேண்டும்.சில பைத்கள் ஓதி நேர்ச்சை வழங்கி அன்று முதல் மதரசா ரமலான் விடுமுறை விடப்படும்.
                  இரவில் தராவிஹ் தொழுகைக்கு குரான் முப்பது ஜூஸ்வு ஓதிமுடிக்கப்பட்டு பள்ளிவாசல்களில் தமாம் செய்வார்கள். பள்ளிவாசல்களில் நோன்பு இருபத்தைந்து முதல் இருபத்திஒன்பது வரை தமாம் செய்வார்கள்.
                  தமாம் அன்று மகரிப் தொழுகை முடிந்து பள்ளியின் மோதினார் தலைமையில் சிறுவர்கள் அந்தபள்ளியின் பெயரை சொல்லிவருவார்கள். உதாரணமாக காட்டுபள்ளிவாசல் தாமம் என்றால் காட்டுப்பள்ளி தமாமுக்கு வாருங்கோ நேர்ச்சை இருந்தா போடுங்கோ என்று சேக் வண்டி தள்ளிகொண்டு வருவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் வாழைப்பழம் கொடுப்பார்கள் சேக்வண்டி நிறையும் அளவிற்கு பழம் சேர்ந்து விடும். பள்ளிவாசலில் தொழுகை முடிந்து தொழ வைத்த இமாமை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் சேர்ந்து வீட்டுக்கு கொண்டு விடுவார்கள். இமாம் வீட்டில் வந்தவர்களுக்கு ரஸ்னா கொடுத்து உபசரிப்பார்கள்.
இருப்பத்தேழு இரவு
                   நோன்பு இருப்பத்தேழு இரவு புனிதமான லைலத்துல் கத்ரு இரவு என ஒரு எண்ணம் உண்டு.அன்று இரவில் அனைத்து பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை நடைபெறும். வீடுகளில் ராந்தால் நட்சத்திர வடிவிலும், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் போன்ற வடிவங்களில் செய்து அதில் குண்டுபல்பு போட்டு தொங்க விடுவார்கள். தற்போது அந்த நிலை மாறி சீரியல் செட் போடுகிறார்கள். சிறுவர்கள் புத்தாடை அணிந்து வாட்டரம் மற்றும் சொந்தகாரர்களின் வீடுகளுக்கு சென்று காட்டி மகிழ்வார்கள் பெரியவார்கள் அச்சிறுவர்களுக்கு காசு கொடுத்து அழகு பார்ப்பார்கள்.காலையில் ஒவ்வொரு வீட்டிலும் வசதிக்கு ஏற்றவாறு சில்லறை காசுகள் மாற்றி வைப்பார்கள். வாசலில் வரும் மிஸ்கின்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பார்கள்.



மூஞ்சா
                     ஊரில் பெருநாள் வந்தால் சிறுவர்கள், குமரிகள், கல்யாணம் ஆன பெண்கள், வாலிபர்கள் மரத்தில் கொச்சை கயிறால் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள்.நோன்பு இருப்பத்தேழில் வாப்பாமார்களிடம் சிறுபிள்ளைகள் மூஞ்சா போட்டு தாங்கோ என நச்சரிப்பில் கடைக்கு சென்று கொச்சை கயிறு வாங்கி வந்து வாளி தண்ணீரில் கயிற்றை நலைத்து கட்டும் போதே ஏலே எங்க வாப்பா மூஞ்சா கட்டா கயிறு வேங்கி வந்துர்கார்லே வாலே பாக்கா என்று சந்தோஷத்துடன் தனது தோழர்,தோழிகளிடம் சொல்லுவார்கள்.
                        பெரியவர்கள் ஒன்று சேர்ந்து தெருவில் இருக்கும் வேப்ப மரத்தில் தடிமனான கயிறு வாங்கி கட்டி ஆடுவார்கள். பத்து, இருபது ஆட வேண்டும் ஆதலால் கணக்கிற்கு ஒரு பாட்டு பாடுவார்கள்
                 ஒன்னு கமலக்க கண்ணு
                  ரண்டு ராஜாக்கு செண்டு
                  மூனே முருங்க பட்ட தோடு
                  நாலே நாய் குட்டி வாலு
                  அஞ்சே பஞ்சா பறக்கு
                  ஆறே ஆணைக்கு மேலே காரு
                  ஏழு எம் பேச்சே கேளு
                  எட்டே டமா டமா கொட்டு
                  ஒம்போதே  ஓட்ட பான சட்டி
                  பத்தே பாளையங்கோட்டை ராஜாவுக்கு விடிய விடிய கல்யாணம் விடிஞ்சி பாத்தா புளியானம்
                   பாலும் பலமும் பக்கத்துல வச்சி.....
                   கோயா மூஞ்சா கேக்காதே கேக்குவேன்......
               போன்ற பாடல்கள் பாடி முடியும் வரை ஒருவர் ஆடலாம்
               பெண்கள்தாயம், சோவி, கால்கா ,பாண்டி, குச்சி குச்சி தாம்பூலம், பாம்புஅட்டை ஆகிய விளையாட்டு விளையாடுவார்கள்.  வாலிபர்கள் நடுத்தெருவில் குறுக்கே கயிறு கட்டி அதிலே அரிசி முறுக்கு கட்டி சைக்கிளில் வந்து கடிக்கும் விளையாட்டும், கயிற்றில் உடைந்த மண் பானை கட்டி ஒருவர் கண்ணை கட்டி கையில் ஒரு விறகு கம்பை கொடுத்து தூரத்தில் விட்டு விடுவார்கள் அவர் கண் தெரியாமல் அந்த பானையை உடைக்க வேண்டும் அற்புதமான் விளையாட்டுக்கள் இரவில் டீப்பு லைட் கட்டி கபடி விளையாட்டு போன்ற விளையாட்டுகள் மூன்று தினங்கள் நடக்கும்.


பெருநாள் பிறை
                நோன்பு இருபத்திஒன்பது அன்று மகரிப் தொழுகை முடிந்து பிறை தென்படுகிறதா என பார்ப்பவர்கள்.பிறை தென்படவில்லை என்றால் மக்கள் நோன்பு வைப்பதற்கு தயாராக இருப்பார்கள். முன்பெல்லாம் நள்ளிரவில் பெருநாள் அறிவிப்புகள் வரும் ஏன் ஒரு தடவை சகர் வைத்து ஸுபுஹ் தொழுகையில் பெருநாள் அறிவிப்புகள் வந்ததுண்டு.
                   பெருநாள் இரவு பசாரில் கால் வைப்பதற்கு இடம் இருக்காது அந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் அலைகடல் என கூறிவிடுவர்.தையல் கடைகாரர்கள் பாடுதான் கஷ்டம் தீடீர்னு பெருநாள் வந்தால்.
                    பெருநாள் அன்று அதிகாலையில் கறிக்கடைகளில் கூட்டம் கூட்டமாக இருக்கும். பெருநாள் தொழுகை ஒன்பது மணி முதல் பத்து, பத்தரை என பள்ளிவாசலுக்கு ஏற்றவாறு மாறுபடும் தொழுது முடித்த கையோடு கொடுமையிலும் கொடுமை பஸ்ஸ்டான்ட் போய் படத்துக்கு கூட்டம் கூட்டமாக ஆண்மக்களும் பெண் மக்களும் படைஎடுத்து செல்வார்கள் ஊரில் ஓடும் ஐஆர், ஜிஎம்டி,கட்டபொம்மன் போன்ற பஸ்கள் எல்லாம் கூட்டத்தின் காரணமாக கவிந்து செல்லும்.
கண்ணகி டாக்கீஸ்
                     ஊரில் இருக்கும் ஒரே தியேட்டர் இதில் ஒரு கொடுமை புனிதமான ரமலான் நோன்பு அறியாமையின் பொருட்டால் பல பெண்கள் படம் பார்த்து கொண்டே நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று நினைத்தாலும் அல்லாஹ்வின் பயம் நம்மை வாட்டுகிறது அல்லாஹ் அந்த அறியாத மக்களை மன்னிப்பானாக ஆமீன்
                     பெருநாள் அன்று கண்ணகி டாக்கீசில் புதிய படம் சின்னாமது அப்துல்காதர் போட்டு விடுவார்.பெருநாளை முன்னிட்டு காலைஷோ, மேட்னி ஷோ, முதல்ஷோ, இரவுகாட்சிகள். நமதூரில் இரவுகாட்சிக்கு இரண்டாம்பிள்ளைஆட்டம்  என வயதான பெண்கள் அழைப்பார்கள் கூட்டம் டிக்கெட் கிடைக்காமல் அடுத்த காட்சிக்கு காத்திருந்து படம் பார்த்த பிறகே வீட்டிற்கு செல்வார்கள்.
                       ஷங்சன் டவுண் போன்ற இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் நமதூர் மக்களின் கூட்டம் அலைமோதும்.
ஆறு நோன்பு பெருநாள்
                நோன்பு பெருநாள் முடிந்த மறுநாள் ஆறுநோன்பு ஆரம்பம் ஆகும். பெரும்பாலும் முதியவர்கள் தான் வைப்பார்கள். ஆறுநோன்பு முடிந்ததும் ஆறு நோன்பு பெருநாள் எல்லோரும் கொண்டாடுவார்கள்.
                வல்ல ரஹ்மானின் கிருபையினால் இந்த நிலைகள் எல்லாம் மாறி பெண்கள் மத்தியில் பலமாற்றங்கள் வந்து விட்டது. தொழுகையிலும், இந்த ரமலான் மாதத்தில் ஊரில் நடந்த பெண்கள் பயானில் பரிபூர்ணமாக கலந்து கொண்டனர்.மார்க்கத்தை விளங்கியவர்களாக ஹஜ், உம்ராக்கள் செய்ய ஆர்வமுடன் இருக்கிறார்கள்.ஆறு நோன்பின் மகத்துவம் விளங்கி பெரும்பாலும் வைக்கிறார்கள் பெண்பிள்ளைகள் படிப்பதற்கு ஆர்வத்துடன் செல்லுவதும் மட்டும் அல்லாமல் மதிப்பெண்கள் எடுப்பதில் மாணவர்களை விட அதிகமார்க் எடுக்கிறார்கள் பெண்களுக்கு என்று முஸ்லிம்பெண்கள் மேல் நிலைப்பள்ளி அன்னை ஹாஜரா கல்லூரி அமைய பெற்று இருப்பது பெண்களுக்கு வரப்பிரசாதம் அதை பெண்கள் நன்கு பயன்படுத்துவதில் அக்கறையும் ஆர்வமும் காட்டுவது மன மகிழ்ச்சி அளிக்கின்றது.

Mohideen Abdul Jabbar
                

        


வெள்ளி, 27 ஜூலை, 2012

மேலப்பாளையத்தில் மாப்பிள்ளை ஊர்வலம்

         மேலப்பாளையத்தில் ஒரு ஆண்மகனுக்கு  கல்யாண தேதிமுடிவு செய்தவுடன் "கூட மாட ஓட"புள்ள குட்டி பெத்தெடுத்த பக்கத்து வீட்டு,அல்லது வட்டாரத்து முன்னாள் மாப்பிள்ளையைமாப்பிள்ளைக்குதோழனாகத்தேர்ந்து எடுப்பார்கள்.அவனுக்கு மாப்பிள்ளைத் துணை என்றும் மாப்பிள்ளை தோழமை என்றும் பெயர்.பெரும்பாலான மாப்பிள்ளைகள்  வரதட்சணை வாங்கித்  தான் கல்யாணம் செய்வார் வார்கள் வரதட்சணை என்பது பெரிய அளவில் பணமாக இருக்காது. ஆனால்  மறுவீடு எத்தனை கலம்,?மாப்பிள்ளை பசியாற எத்தனை கலம்?.மாப்பூட்டுக்கு  எத்தனை கலம் கொடுத்து விடுவீர்கள்? என்று பலவிதமான கலகக் கேள்விகள் எல்லாம் கேட்டு அதன்பிறகு தான் பணம் நகை பற்றி பேசுவார்கள் . 
இந்த கொடுமைகள் எல்லாம் தாண்டிஅப்போதே மஹர் கொடுத்து மணம்முடித்த மாவீரர்களும் உண்டு.
            மாப்பிள்ளைகாரும் ஊர்வலமும்
            மாப்பிள்ளை வீட்ட்டுப்  பந்தலில்  மைக் செட் குழாய்கள் கட்டி ரிக்கார்டு பிளயர் பாட்டு ஏழுநாட்கள் போடுவார்கள். மாப்பிள்ளைதுணையை அழைத்து "நீதான் அவனுக்குத் துணை. செலவுக்கு இந்தா வைத்துகொள்" என்று தொகையை  கொடுத்து விடுவார்கள்.
ருபாய் வாங்கியதும் அந்த மாப்பிள்ளைத்துணை  மாப்பிள்ளையிடம் "இனிமேல் என்னை கேட்காமல் ஏதும் செய்யகூடாது என மாப்பிளைக்கு தடைபோட்டு விடுவார். 


          பெரும்பாலும் கல்யாணங்கள் இரவில் நடக்கும் இரவுகல்யாணங்கள் பார்பதற்கு அற்புதமாக இருக்கும் காரணம் மாப்பிள்ளை கார் ஒளிவெள்ளத்தில் மிதந்து வரும் அழகைபார்ப்பதற்கு என்றே ஆண்மக்களும்,பெண்மக்களும் தங்களது தூக்கத்தை மறந்து காத்துகொண்டு இருப்பார்கள் 
      துணைக்கு ஒரு உதவியாளர் போட்டுகொள்வர் அவருக்கு பெயர் அசிஸ்டெண்ட்துணை திங்கள்கிழமையே மாப்பிளைக்கு புது துணிமணிகள் துணைகளுக்கும் உண்டு மாப்பிள்ளைக்கு புதிய செருப்பு சோப்பு சோப்புகேஸ் எல்லாம் புதிதாக வாங்கிகொள்வார்கள் பெண்னுக்கு ரகசியசாமான் வாங்கிகொடுப்பார்கள் புதிய சட்டை தையித்து வாங்கி விடுவார்கள் சனிக்கிழமையன்று மாப்பிளை நட்பு வட்டாரத்தை பொறுத்து நண்பர்கள் இருபது அல்லது ஐம்பது முதல் நூறுபேர் வரை அழைப்பு கொடுத்துவிடுவார்கள். 
          கல்யாண காலையில் அனைவரும் ஆளுக்கு ஒரு சைக்கிளில் வந்துவிடுவார்கள் அதற்கு முன்னாள் கொட்டு(பேண்டு வாத்தியம்) காரர்கள் வந்துவிடுவார்கள் மாப்பிள்ளைதுணை அவர்களிடம் சென்று கொட்டு அடிக்க சொல்லுவர் கால்மணிநேரம் கொட்டு அடித்து விட்டு மாப்பிள்ளை கார் வந்துவிடும் பெரும்பாலும் பகல் கல்யாணம் அம்பாஸிடர்கார் தான் வரும் ஜோடனை கார் உள்ளது அது இரவுகல்யாணம் என்றால் அந்த காரில் லைட்செட் போட்டு ஜோடித்து கொண்டுவருவார்கள்
மச்சான்மார்களின் கோபம்
            மாப்பிள்ளை ஜோடிக்க வட்டாரவழி சொந்தங்கள் முக்கியமாக கொந்து தலைவர்கள் அனைவரும் வீட்டில் வந்து அமர்ந்து விடுவார்கள் வீடு பரபரப்பாக காணப்படும் என்னவென்று கேட்டால் அவமச்சான் அந்தபுள்ள மாப்பிள்ளை வரலை என்பார்கள் உடனே மாப்பிள்ளை துணை ஸ்டைலாக சைக்கிளை எடுத்துகொண்டு பார்க்க சென்று விடுவார் அங்கே மச்சான்காரன் தன்னுடைய பவரை காட்டும்முகமாக ஆவ்லாதி சொல்வான் உடனே திரும்ப வந்து மாப்பிள்ளையை அழைத்துகொண்டு செல்வார் செல்லும்போதே மாப்பிள்ளையிடம் என்னப்பா நான் உன் மச்சானிடம் என்னோமெல்லாம் சொல்றனோ அதையெல்லாம் நி ஆமாங்கோ ஆமாங்கோ என்று மட்டும் சொல்லணும் வேறு எந்த பேச்சும் பேசக்கூடாது நான் சொல்லிபுட்டேன் என்றே போய் சேர்ந்து இருவரும் சேர்ந்து தாங்கி தடுக்கி அல்லாஹ் ரசூல்காக மன்னித்து கொள்ளுங்கள் மச்சான் நீங்க வந்தான் நான் போவேன் என்றவாறு பேசி கூப்பிட்டு வருவார்கள். 
          மாப்பிள்ளை வீடு பரபரப்பாக இருக்கும் மாப்பிள்ளை தாயார் வாப்பா சகோதரிகள் அனைவரும் வாசலில் நின்றுகொண்டு மச்சானை எதிர்பார்பார்கள் மச்சான்காரன் மாப்பிள்ளை மற்றும் தோழர்கள் புடைசூழ சைக்கிளில் வருவதை பார்த்து வந்துவிட்டார் வந்துவிட்டார் என்று சந்தோசம் பொங்க மச்சானை அனைவரும் வாசலில் வரவேற்று உள்ளே சென்று ஜோடிப்பார்கள் (எனக்கு தெரிந்து மாப்பிள்ளை மாலையும் கையில் பூசெண்டு வைத்துகொண்டு தாய்,தகப்பன் காலில் விழுவதை பார்த்து இருக்கிறேன்)
பைகளில் பீடாவும் எல்லாவகை சிகரெட்டும்
        மாப்பிள்ளை துணை தனது அசிடன்டிடம் மூன்று துணிபைகளை (பெரியது) கொடுப்பார் ஒன்றில் சாதாபீடா,இரண்டாவது பையில் ஸ்பெஷல் பீடா மூன்றாவது பையில் அனைத்துவகை சிகரெட் பாக்கெட்கள்,பீடிபண்டல்கள் இருக்கும் மூன்றுபைகளும் காரில் பின்புறம் வைத்து அதற்க்கு ஒரு சிறுவனை காரினுள் காவல்போட்டுவிடுவார்கள் மாப்பிள்ளைக்கு துணை புதிய செருப்பை போடசொல்லுவார் 
       ஸ்பெஷல்பீடாவை எடுத்து மாப்பிள்ளைக்கு கொடுத்து நான் சொல்லிகொடுத்ததுபோல் சாப்பிடவேண்டும் வாயில்போட்டுகுழப்பகூடாது ஸ்டைலாக மென்று சவித்து சாப்பிடவேண்டும் என்று கொடுப்பார் 
       கொட்டுஅடித்து காரில் ஏற்றுவார்கள் காரில் மாப்பிள்ளை முன்சீட்டில் அமர்ந்துகொண்டு பீடா சாப்பிட்டுகொண்டே இருப்பார் மூன்று கர்சிப்பில் பான்ஸ்பவுடர் தட்டி துணை தனது கையில் வைத்து கொண்டு மாப்பிள்ளைக்கு அப்பப்ப டச்சப் கொடுப்பார் கொட்டுஅடித்துக்கொண்டு முன்னாள் செல்வார்கள் கார் ஆமைவேகத்தில் ஊர்ந்து செல்லும் நண்பர்கள் காரின் இருபக்கங்களிலும் அவர்களுக்கு பிடித்த பாட்டை கொட்டுகாரர்களிடம் அடிக்க சொல்லி நடந்து வருவார்கள் அனைவருக்கும் ஜங்ஷன் சீனத்பரிமளம் ஸ்டோரில் வாங்கிய ஜன்னத்துல் பிர்தௌஸ் செண்டு மற்றும் பீடா கொடுத்துவிடுவார் மாப்பிள்ளை கார் செல்லும் போதே ஒவ்வொரு வீட்டிலும் காளிமார்க் கலர் குடிக்ககொடுப்பார்கள் மாப்பிள்ளை அதை ஒருமுடக்கு அல்லது இரண்டு முடக்கு குடித்துவிட்டு துணையிடம் கொடுத்து விடுவார் துணை கொஞ்சம் நண்பர்கள் கொஞ்சம் என வரக்கூடிய கலர் மற்றும் பாலை குடிப்பார்கள் மாப்பிள்ளை தெரு முடிந்ததும் பெண்வீட்டிற்கு கார் ஊர்ந்து செல்லும் பீடாசப்ளை தெருவில் உள்ள முக்கியமான நபர்களுக்கு சாதா ஸ்பெஷல் என துணை பந்தாவாக கொடுத்துகொண்டே வருவார் தெரு ரோடு என் கார்சுற்றி இறுதியாக பெண்வீட்டு தெருவிற்கு வரும் போது துணை மாப்பிளைக்கு தொப்பியை கழற்றி தலைவாரி ஸ்பெஷல்பீடா கொடுத்து பௌடர்டச்சப் கொடுத்து உள்ளே செல்லுவார்கள் 
            மாப்பிள்ளையை பார்க்க தெருவே ஆர்வமாக திருணையில் கூடிநிற்பார்கள் உள்ளே பெண்ணின் சொந்தங்கள் கிளாசில்பாலை வைத்து கொண்டு காத்துஇருப்பார்கள் மாப்பிள்ளை ஓவ்வொரு வீடாக பால் குடித்துவிட்டு மாப்பிள்ளைக்கு உச்சா கண்டிசனில் பெண்வீடு வந்து விடும் நண்பர்கள் பெண்வீட்டுதெருவின் இருசைடிலும் பீடா கொடுத்து நிக்காஹ்விற்கு வாருங்கள் என்று அழைத்துகொண்டு வருவார்கள் பெண்வீட்டில் மாப்பிள்ளை இறங்கும்போது கொட்டின் வேகமும் தாளமும் மாறுபடும்

கால்கழுவுவதற்கு மோதிரம்
            மாப்பிள்ளை காரில் இருந்து துணைதான் இறக்கிவிடுவார் இறங்கியவுடன் பெண்ணின் சகோதரன் (மைத்துனன்) புதுசெம்பில் தண்ணீர் வைத்து மச்சானுக்கு கால்கழுவ விடுவான் காலைகழுவியதும் துணை கொடுக்கும் மோதிரத்தை மைத்துனனுக்கு போடுவார் கத்தீப்லெப்பை வந்தவுடன் நிக்காஹ் ஆரம்பம் ஆகும் (கத்தீபிற்கு தெருக்களில் கல்யாணம் அதிகமாக இருந்தால் மாப்பிள்ளை ஒருமணி அல்லது இரண்டுமணி நேரம் காத்துஇருக்கவேண்டும்) பின்பு தாலிகட்டியவுடன் மணமக்களின் இரு கரங்களை கர்சீப்பால் மறைத்து கட்டி ஹாண்ட்சேக் கொடுக்க வைப்பார்கள்.வந்தது போல பெண்ணை மட்டும் காரில் ஏற்றி கொண்டு ஒத்தடிகொட்டு அடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தவுடன் நண்பர்கள் புடைசூழ மாப்பிள்ளை டி அல்லது கூல்டிரிங்க்ஸ் குடிக்க செல்வார். கல்யாணம் முடிந்த ஏழுநாட்கள் துணை சொல்லை மீறக்கூடாது அன்று மாலை துணை நண்பர்கள் புடைசூழ ஷங்ஷன் அரசன் பேக்கரியில் ஏழுநாட்களுக்கும் தனக்கும் சேர்த்து அவர்நினைப்பதை வாங்கிகொடுப்பார் இன்றும்கூட அந்தபழக்கம் இருந்து வருகிறது.
ஏழாம்நாள்முழுக்கும் சினிமாதியேட்டரும்
             மாப்பிள்ளையை அதிகாலையில் மாப்பிள்ளைதுணைதான் கதவை தட்டி ஆற்றிற்கு குளிக்க கூப்பிட்டு செல்வார் ஏழாவது நாள் அன்று பெண்ணின் சகோதரர்களை ஆற்றிற்கு நண்பர்கள் புடைசூழ வேனில் அழைத்து செல்வார்கள் ஆற்றில் மச்சான் மைத்துனனுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள் அன்று மதியம் மாப்பிள்ளை வீட்டில் தான் விருந்து மாலை நான்கு மணிக்கு கார் அல்லது பஸ்ஸில் மைத்துனரை சினிமா பார்க்க அழைத்து சென்று இரவில் தாஜ் அல்லது ஜன்னத் ஹோட்டலில் சாப்பிட்டு அரசன் பேக்கரியில் ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வருவார்கள்
மறுவீடு சாப்பாடு
                 மறுவீடு சாப்பிட மாப்பிள்ளை நண்பர்களோடு சைக்கிளில் ஊர்வலமாக சுமார் ஐம்பது அல்லது அதற்க்கு மேல் வருவார்கள் துணைகையில் அதே போன்று இரண்டு பைகள் இருக்கும் மறுவீடு சாப்பாட்டிற்கு ஸ்பெஷல் பீடா மட்டும் தான் வழக்கமாக சிகரெட் துணை பெண்வீட்டில் உள்ளவர்களுக்கு பீடாவை வழங்கி விடுவார் சாப்பாடு ஸ்பெஷல் லாக இருக்கும் கூல்டிரிங்க்ஸ் எல்லாமே போதும்போதும் என்கின்ற அளவிற்கு நல்ல கவனிப்பார்கள் சாப்பிட்டு முடித்தும் துணை அனைவருக்கும் பீடா சிகரெட் கொடுப்பார் சிலர் சிகரெட்டை அங்கேயே வைத்து குடிப்பார்கள் பெண்வீட்டை ஒரு வழியாக ஜாலி பண்ணுவார்கள் இப்போது அந்த பழக்கவழக்கம் இல்லை
மாரார், சித்ரா ஸ்டுடியோக்கள்
             புதிய மாப்பிள்ளை பெண்ணை முதன்முதலில் வெளியே ஷங்சனுக்கு அழைத்து செல்ல வேண்டும் இல்லையென்றால் அது மிக குறையாக சொல்லும் காலம் மணமக்கள் மட்டும் அல்லது மைத்துனன் சேர்ந்து செல்வான் முதன்முதலில் மேலே கூறப்பட்ட ஸ்டுடியோ ஒன்றில் சென்று ஜோடியாக போட்டோ எடுப்பார்கள் பின்பு செருப்பு கடைக்கு சென்று பெண்ணுக்கு புது செருப்பு பின்பு சினிமா சென்று படம் பார்த்துவிட்டு இரவில் ஹோட்டல் சென்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவார்கள்.
               மறுநாள் இரண்டு காப்பி போட்டோ வாங்கி அதை கண்ணாடி கடையில் கொடுத்து பிரேம் போட்டு பெண்வீட்டில் ஒன்றும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றும் சுவரில் புதிய ஆணி வாங்கி அடித்து வைத்து பார்த்து பார்த்து மேச்சுவார்கள்.
                 ஒருவேளை பெண் மாமியாரிடம் சண்டைபோட்டுகொண்டால் மாமியார் அந்த போட்டோவை பார்த்துக்கொண்டு கொல்லிமுடிந்துடுவா தாலியரப்பா மூஞ்ச பாரு மூஞ்ச என்று பேசுவதையும் கேட்க முடியும்

மாப்பிள்ளைதுணையின் தோற்றம்
             முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டு அதில் ஒரு கர்சீப் சொருகி இருப்பார் அல்லது சட்டை கலரில் வைத்து இருப்பார்.முடிந்த வரை பீடாபைகளை கக்கத்தில் வைத்து இருப்பார் அல்லது பீடா மற்றும் சிகரெட் பையினை கையில் வைத்து இருப்பார்.மாப்பிள்ளையை அடிக்கடி மிரட்டுவார்.பல வித்தைகளை சொல்லி கொடுப்பார்
                1990 அல்லது 1991  களில் இந்த பழக்கவழக்கங்கள் மாறி விட்டது

Mohideen Abdul Jabbar

வியாழன், 26 ஜூலை, 2012

மேலப்பாளையமும் தக்கடியும்

          மேலப்பாளையத்தில் நோன்பு வந்துவிட்டால் சமையல்கலை வித்தகர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கிகள் காரணம் ஒருபுறம் அனைத்துபள்ளிவசல்களுக்கும் நோன்புக்கஞ்சிகாயிச்சும் பணி காலை ஒன்பதுமணிமுதல் பதினொன்று அல்லது பன்னிரண்டுமணி வரை ஆகிவிடும் அதன் பிறகு நோன்பு திறக்க நாஷ்ட வேலை ஊரில் கல்யாணம் முடிந்து மூன்று ஆண்டுகள் வரை நோன்பு சீர்கொடுக்கும் பழக்கம் இன்று வரை இருந்து கொண்டுதான் வருகிறது ஊரில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் சில பழக்கவழக்கங்கள் தொன்றுதொட்டு நடந்துதான் வருகிறது.
         சம்பந்தம் பேசிபோட்டுஇருந்தால் அந்த வருடம் நோன்புசீர் ஓட்டுமாவும் நெய்யும் கல்யாணம் ஆனா முதல் வருடம் என்றால் நோன்பு சீராக வட்டல்ஆப்பம் இடியப்பம்,பனியம் போன்றவை இரண்டாவது வருடம் அதேபோல மூன்றாவது வருடம் கொடுப்பார்கள்
          நோன்புசீரில் தக்கடி, சேமியாபிரியாணி, புரோட்டாசெட்,தோசைகறி , பிரியாணி போன்ற உணவுபொருட்கள் கொடுப்பார்கள்
          தக்கடி அதில் ஒரு சிறப்புவாய்ந்த உணவுபொருள் ஆகும் நெல்மாவுவில் வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு போட்டுகையால் கொலக்கட்டை பிடிபார்கள் அதுவும் நோன்புசீருக்கு என்றால் ஒருகூட்டமே இருந்து கொலக்கட்டைபிடிக்கும் மாவுவிற்கு ஏற்றபடி கறி சேர்த்து தக்கடிகூட்டுஉடன் சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும்
                        ஊரில் சில வருடங்களாக சஹர் வேளையில் குறைந்தவிலையில் சாப்பாடு கொடுக்கிறார்கள்  இரவே அதற்கான டோகேன் எடுக்க வேண்டும் நெய்சோறு வருவல் கோழிகுழம்பு பருப்புசாம்பார் ருபாய்110 சன்கேட்டரிங்,ஹோட்டல் பீமா,ஹோட்டல்தாஜ் போன்றவர்கள் நடத்துகிறார்கள்
           பைபாஸ் ருசி ஹோட்டலில் சஹர நேர சாப்பாடு சுடசுட இலவசமாகவே கொடுக்கிறார்கள்

சனி, 18 பிப்ரவரி, 2012